கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: June 9, 2024
பார்வையிட்டோர்: 308 
 
 

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உங்களுக்கு ஞாபக சக்தி இருக்கிறதோ? அப்படியானால் நான் ஒரு பாட்டைச் சொல்கிறேன்; அதை எங்கேயாவது கேட்டிருக்கிறீர்களா? நன்றாக யோசித்துச் சொல்லுங்கள்.

“ஜன கண மன அதி நாயக ஜயஹே
பாரத பாக்ய விதாதா”

ஹோ, ஹோ, ஹோ – நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்கள். ரேடியோவிலே கேட்டது உங்களுக்கு ஞாபகத்துக்கு வருகிறது. சினிமாவிலே கேட்டதும் நினைவுக்கு வருகிறது. இன்னும் எங்கெங்கோ கேட்டிருக்கிறீர்கள்.

இந்தப் பாட்டுச் சுதந்தரக் குடியரசாகிய நம்முடைய பாரத நாட்டின் கீதம்: தேசிய கீதம் என்று சொல்லுவார்கள்.

இதைப் பாடினவர் ரவீந்திரநாத டாகுர் என்பவர். அவர் இப்போது இல்லை. நீண்ட தாடியோடு இருக்கும் அவர் படத்தை நீங்கள் எந்தப் புத்தகத்திலாவது பார்த்திருக்கலாம். அவர் பெரிய கவிஞர். அழகாகக் கவி பாடுவார். மேல் நாட்டுக்காரர்கள் அவர் பாட்டை மெச்சி நோபல் பரிசு என்ற பெரிய பரிசை வழங்கினார்கள்.

நீண்ட தாடிக்காரராகிய அவர் பிறக்கும் போதே தாடிக்கார ராகிவிட்டாரா, என்ன? இல்லை, இல்லை. அவரும் உங்களைப் போலக் குழந்தையாக இருந்தார். மாணாக்கனாக இருந்தார். அப்போதெல்லாம் அவர் மிகவும் சாது. பள்ளிக்கூடத்துக்குப் போகிறதென்றாலே அவருக்கு வேப்பங்காயாக இருக்கும்.

பெரிய பணக்காரக் குடும்பத்திலே பிறந்தவர் ரவீந்திரர் கல்கத்தாவில் அவர்களுக்குப் பிரம்மாண்டமான வீடு இருந்தது. அவருக்குப் பல தமையன்மார். வீடு முழுவதும் சொந்தக்காரர்களும் வேலைக்காரர்களும் நிறைய இருப்பார்கள். எப்போதும் ஜேஜே என்று இருக்கும் வீடு.

குழந்தை ரவிக்குக் கூட்டத்திலே இருப்பதென்றால் பிடிப்பதில்லை. தனியாகப் போய் உட்கார்ந்து கொள்ளுவார். என்ன என்னவோ யோசித்துக்கொண்டே இருப்பார். அவர்கள் வீட்டில் பழங்காலத்துப் பல்லக்கு ஒன்று இருந்தது. முன்பு அதன்மேல் பெரிய மனிதர்கள் ஏறிப் போவார்கள். ‘ஹம் ஹும்’ என்று சொல்லிக்கொண்டே வேலைக்காரர்கள் அதைத் தூக்கிக்கொண்டு போவார்கள். இப்போதோ அதன்மேல் யாரும் ஏறுவதே இல்லை. நல்ல நல்ல வண்டிகளெல்லாம் வந்துவிட்ட பிறகு பழைய பல்லக்கை யார் உபயோகிப்பார்கள்? அதில் யாராவது ஏறிச் சென்றாலும் ஜனங்கள் பார்த்துச் சிரிப்பார்கள்.

பழைய பல்லக்கை ஒரு மூலையிலே வைத்திருந்தார்கள். குழந்தை ரவி அதைக் கண்டார். அதன்மேல் அவருக்குப் பிரியம் உண்டா யிற்று. யாரும் தொந்தரவு பண்ணாமல் சுகமாக உட்காரலாம் என்று எண்ணினார்.

பல்லக்கிலே போய் உட்கார்ந்தார். அவருக்குக் கரைகாணா ஆனந்தம் உண்டாயிற்று. பல்லக்கைத் தூக்க ஆள் இல்லை. அதில் அவர் ஏறிப் பிரயாணம் செய்ய முடியாது. ஆனாலும் அவ ருக்கு அதிக ஆனந்தம் உண்டாயிற்று. ஏன் தெரியுமா? அவர் அதைப் பல்லக்காகவே நினைக்கவில்லை, ஒரு பெரிய சமுத்திரம். அதன் நடுவிலே ஒரு சிறிய தீவு. அங்கே ஒரு வீரன் காவலி லிருந்து தப்பி ஓடிவந்துவிட்டான். யாருடைய தொந்தரவும் இல்லாமல் அந்தத் தீவிலே தனிக்காட்டு ராஜாவாக வாழ்கிறான். ரவி அந்த வீரனாக ஆகிவிடுகிறார். பல்லக்கே தீவாகிவிடும்.

திடீரென்று அந்தத் தீவு மாறிவிடும். பல்லக்குத் தானாகவே பறக்க ஆரம்பித்துவிடும். நிஜமாக அல்ல. எல்லாம் மனசிலே நினைத்துக்கொள்கிறதுதான். பல்லக்குப் போய்க்கொண்டே இருக்கும். கவி பல தேசங்களைக் கடந்து போவார். அவர் பாட புத்தகத்தில் என்ன என்னவோ தேசங்களைப்பற்றியெல்லாம் வாசித்திருந்தார். அந்தத் தேசங்களைப் பார்த்துக்கொண்டே அவர் பிரயாணம் செய்வார். அப்புறம் காடு வரும். காட்டிலே புலி வரும். குழந்தை ரவி சிறிது நடுங்குவார்.

இப்படியெல்லாம் மனசிலே கற்பனை செய்துகொள்வார் ரவி. பொழுது போனதே தெரியாமல் அந்தப் பழைய பல்லக்கில் அவர் மனம் போனபடி யெல்லாம் பாவனை செய்வார்.

ரவியினிடம் ஒரு மரச் சிங்கம் இருந்தது. மரத்தினால் ஒரு கத்தியும் வைத்திருந்தார். நவராத்திரி வந்தது. சிங்கத்தைப் பலி கொடுத்தால் அற்புதமான சக்தி கிடைக்கும் என்று யாரோ பேசிக்கொண்டார்கள். ரவியின் காதில் அது விழுந்தது. அந்த அற்புத சக்தியை அடைய அவர் நிச்சயித் தார். சிங்கத்தைப் பிடித்துக்கொண்டார். மரச் சிங்கந்தான்; பொம்மைச் சிங்கம். ஆனாலும் அவர் மனசுக்குள்ளே நினைத் தால் நிஜச் சிங்கம் ஆகிவிடுமே. அதை மரக் கத்தியினால் லொட்டு லொட்டு என்று அடிப்பார். கத்தியிலே கூர்மை ஏது? ஆகையால் லொட்டு லொட்டு என்றுதான் சத்தம் கேட்கும். பலிகொடுத் தால் மந்திரம் சொல்ல வேண்டாமா? அவரே அந்த மந்திரத்தைப் புதிதாகக் கட்டினார்.

உல்குட் டுல்குட்
ட்யாம் குங்குட்
ஆக்ரோட் பாக்ரோட்
கட் கட் கடாஸ்
பட் பட் படாஸ்

இதுதான் அவர் கட்டின மந்திரம். இதற்கு என்ன அர்த்தம் என்று எனக்குத் தெரியாது. ரவிக்குக்கூடத் தெரியாது.

ரவீந்திரர் வீடு மிகவும் பெரியதென்று முன்பே சொன்னேன் அந்த வீட்டில் சில சமயங்களில் ராத்திரியில் நாடகம் நடை பெறும். நாடகக்காரர்கள் வந்து திரை கட்டி நாடகம் ஆடுவார்கள். ராத்திரி நெடுநேரம் நாடகம் நடக்கும். பெரியவர்களெல்லாம் போய்ப் பார்ப்பார்கள். அப்போது நடுநடுவே ரூபாயை மேடை மேல் எறிவார்கள். அவர்களுக்கு நாடகத்தினால் ஏற்பட்ட சந்தோஷத்துக்கு அது அடையாளம். நடிகர்கள் அதை எடுத்துக் கொள்வார்கள்.

ஒரு நாள் குழந்தை ரவியும் நாடகத்துக்குப் போயிருந்தார். அவர் கையிலே ரூபாய்களைக் கொடுத்து நடுநடுவே ஒவ்வொரு ரூபாயாகப் போடச் சொன்னார்கள். ரவிக்கு மிகவும் சந்தோஷ மாக இருந்தது. ரூபாயைக் கொஞ்ச நாழிகைக்கு ஒரு தரம் போட் டுக்கொண்டே வந்தார். குழந்தைதானே? எவ்வளவு நேரம் விழித்துக்கொண்டே இருப்பார்? கண் இமைகளைத் தூக்கம் இழுத்தது தூங்கி விழுந்தார். அதைப் பார்த்து அவரை அப் படியே தூக்கிக்கொண்டு போய்ப் படுக்கையிலே விட்டு விட் டார்கள். மறுநாள் எழுந்து பார்த்தால் அவர் படுக்கையிலே இருக்கிறார். “நான் இங்கே எப்படி வந்தேன்? நாடகமல்லவா பார்த்தேன்? ரூபாயைப் போட்டேனே! எல்லா ரூபாயையும் போடவில்லையே!” என்று அம்மாவிடம் கேட்டார். ”நீ நாடகம் பார்த்த அழகு போதும் நீதான் தலையை அசைத்து அசைத்துத் தூங்கி விழுந்தாயே! உன்னைத் தூக்கிக்கொண்டு வந்து படுக்கை யில் விட்டேன்” என்றாள் அம்மா. அத்தனை பேரும் பார்க்கவா?” என்று ரவி கேட்டார். அம்மா, “ஆம்” என்றாள். ரவிக்கு ஒரே வெட்கமாகப் போய்விட்டது. “என்னைத் தூங்குமூஞ்சி என்று அத்தனை பேரும் தெரிந்து கொண்டார்களே!” என்று வருத்தப் பட்டு முகத்தைக் கவிழ்த்துக்கொண்டார்.

ரவிக்குப் பல அண்ணன்மார், பல மன்னிகள். ஒரு மன்னி சீன தேசத்துக் கரிக்குருவி ஒன்றை வளர்த்து வந்தாள். உல்லாச மாகப் பறந்து விளையாடுகிற பறவையைக் கூட்டில் அடைத்தது ரவிக்குப் பிடிக்கவில்லை. அது சத்தம் போட்டால் அவருக்கு வேதனையாக இருக்கும்; வயிற்றை என்னவோ பண்ணும்.

மன்னிக்கு அணில் பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதற்கு ஏற்பாடு செய்துகொண் டிருந்தாள். ரவி அவளிடம் போய், “மன்னி, மன்னி , நீ தப்புக்காரியம் செய்கிறாய்” என்றார். “என்ன தப்பு?” என்று கேட்டாள். குழந்தையைப் போல ஆனந்தமாக விளையாடும் அணிலைப் பார். அது கட்டுக் காவல் இல்லாமல் விளையாடுவது எவ்வளவு அழகாக இருக் கிறது. அதைப் பிடித்து வந்து சிறையில் அடைப்பது போல அடைக் கலாமா? அடைத்தால் அது சந்தோஷமாக இருக்குமா?” என்றார். மன்னிக்கு இதெல்லாம் காதில் விழவில்லை. “போடா பைத்தியக் காரா மகா பெரியவன் போலப் பேச வந்துவிட்டான்” என்று சொல்லிவிட்டாள்.

இரண்டு அணில்களைப் பிடித்து வந்து மன்னி வளர்க்க ஆரம் பித்தாள். ரவீந்திரருக்கு மனசு மிகவும் கஷ்டப்பட்டது. அவரையே ஜெயிலில் பிடித்துப் போட்டால் எப்படி இருக்குமோ அப்படி அவர் சங்கடப்பட்டார். ஆகையால் அவர் சமயம் பார்த்து ஒருவருக்கும் தெரியாமல் அந்த அணில்களை எடுத்து வெளியிலே விட்டார். என்ன வந்தாலும் வரட்டும் என்ற துணிவோடே தான் அப்படிச் செய்தார். அப்போது அவர் மனசிலிருந்து ஏதோ பெரிய பாரம் குறைந்தது போல் இருந்தது.

விஷயம் மன்னிக்குத் தெரிந்தது. ரவியை வைத்தாள். அதை அவர் பெரிதாக எண்ணவில்லை. அந்த வசவு அன்றோடு போயிற்று. ஆனால் சிறைப்பட்ட அணில் பிள்ளைகளோ விடுதலை யடைந்து ஆனந்தமாகத் துள்ளிக் குதித்தன. அதைப் பார்த்துப் பார்த்து அவர் இன்பம் அடைந்தார்.

சின்ன வயசிலேயே ரவீந்திரர் சொந்தமாகக் கவிதை பாடினார். அவருக்கு ஒரு நாள் வேடிக்கையாக ஓர் எண்ணம் உண்டாயிற்று. தோட்டக்காரன் வர்ண வர்ணமான மலர்களைப் பறித்து வந்து பூக் கிண்ணங்களில் வைப்பான். கண்ணைப் பறிக்கும் அழகுள்ள பூக்கள் : மென்மையான மலர்கள் . இந்த மலர்களைப் பிழிந்து அந்தச் சாற்றிலே பேனாவைத் தோய்த்துக் கவிதை எழுதினால் மிகவும் நன்றாக இருக்குமே!’ என்ற எண்ணம் ரவிக்குத் தோன் றிற்று. பூக்களை எடுத்தார்; கசக்கிப் பிழிந்தார். அதிலிருந்து ஒரு துளி கூடச் சாறு கிடைக்கவில்லை. பிழிவதற்கு ஏதாவது யந்திரம் ஒன்றைச் செய்தால் என்ன என்று மற்றோர் யோசனை உண் டாயிற்று. அவருடைய அண்ணாவிடம் சொன்னார். இந்தப் பைத்தி யக்கார யோசனையைக் கேட்ட அவருக்குச் சிரிப்பு வந்தது. ஆனாலும் குழந்தையின் ஆசையைக் கெடுக்கக் கூடாதென்று, ஒரு தச்சனைக் கூப்பிட்டார். மரத்தால் உரல் ஒன்றைப் பண்ணிக் கொடுக்கச் சொன்னார். ஒரு குழவியும் பண்ணச் சொன்னார்.

தச்சனிடம் அந்த இரண்டையும் பெற்ற ரவி தம் காரியத்தை ஆரம்பித்தார். பூவையெல்லாம் உரலில் கொட்டினார். குழவியினால் அரைத்தார். அப்போதும் மலரிலிருந்து ரஸம் கிடைக்கவில்லை அவருக்கே சலித்துப் போயிற்று. “இப்படியெல்லாம் அரைத்தால் மலரில் சாறு வராது என்று தெரிந்து கொண்டார்.

ரவி மலரின் சாற்றிலே தோய்த்துக் கவிதை எழுதவில்லை. ஆனால் அவர் எழுதின கவிதைகள் தேனிலே தோய்த்து எழுதியவை போல இனிமையாக இருக்கும். சின்ன வயசிலேயே அவருக்குக் கற் பனையும் கவிபாடும் சக்தியும் இருந்தன.

அவரும் உங்களைப் போலக் குழந்தையாக இருந்தார், வேடிக்கை விளையாட்டெல்லாம் விளையாடினார் என்பதை நினைக் கும்போது, உங்களுக்கு ஆனந்தம் ஏற்படுகிறதல்லவா?

– விளையும் பயிர், முதற் பதிப்பு: 1956, கண்ணன் வெளியீடு, கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *