தமிழ் கற்பித்தமை குற்றமா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள் நாடகம்
கதைப்பதிவு: June 14, 2024
பார்வையிட்டோர்: 793 
 
 

(1999ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காட்சி-1

இடம் : தெருவீதி 

பாத்திரங்கள் : பிரதீப் – துஷியந்தன் 

பிரதீப் : ஹாய்! துஷியந்தன் எங்க போயிற்று வருகிறாய்? 

துஷியந்தன் : நான் தமிழ் படித்துவிட்டு வாறன். எங்கட் மூற்றர் ஸ்பிராகவைப் படிச்சிட்டு வாறன்.

பிரதீப் : நீ என்ன சொல்கிறாய்? தமிழா? என்னுடைய மூற்றர் ஸ்பிறாக டொச். உனக்கென்ன விசரா? அப்ப நான் ஏன் டொச் படிக்கிறன் என்று உனக்குத் தெரியாதா? 

துஷியந்தன் : சரி.. எனக்கு விசர்தான். உனது தாய்நாடு எது? 

பிரதீப் : நான் ஜேர்மனியில் பிறந்தனான். எனது தாய்நாடு டொச்லாண்ட். தாய்மொழியும் டொச்தானே. 

துஷியந்தன் : ஓ.கே. அப்படியென்றால் ஏன் நீ கறுப்பு நிறமாக இருக்கிறாய்? வெள்ளையாக இருக்கவேணுமே. 

பிரதீப் : அது ஏன் என்று எனக்குத் தெரியாது. எனது அப்பா அம்மாவைத்தான் கேட்கவேண்டும். 

துஷியந்தன் : அது ஏன் என்று நான் சொல்லவா? நீ உனது அம்மா அப்பாவைக் கேட்க வேண்டாம். நான்.நீ..எல்லோரும் தமிழ் ஆட்கள். எங்கட தாயகம் தமிழீழம். டொச் லாண்ட் எங்கள் தாய்நாடு அல்ல. நாங்கள் எப்ப என்றாலும் ஒருநாள் எங்கட நாட்டுக்கு திரும்பப் போகவேண்டும். அங்கு போனால் தமிழ் கதைக்க வேணும். அதனால நாம் தமிழ் படிக்க வேணும். தமிழ் நல்ல மொழி. எங்களுக்கு எங்கட மொழி தெரிந்திருக்க வேண்டும்தானே. 

பிரதீப் : இப்படி என்று அம்மா எனக்கு எதுவும் சொல்லவில்லையே. நீ எனக்குத் தமிழ் சொல்லித் தருகிறாயா? எப்படி எழுதுவ தென்று எழுதிக் காட்டுகிறாயா? துஷி! 

துஷியந்தன் : ஓ.கே. எனக்குத் தெரிந்ததை நான் சொல்லித் தருகிறேன். 

பிரதீப் : அப்படி என்றாலும் பரவாயில்லை. நான் உன்னிடம் தமிழ் படிக்கிறேன் என்று என் அப்பா அம்மாவிடம் சொல்ல வேண்டாம்.

துஷியந்தன்  : ஓ… ஓ … நான் சொல்லமாட்டேன். ஆனால் நான் படிக்கிற ரீச்சரிடம் உன்னைப் பற்றிச் சொல்லுவன். சிலநேரம் அவ்விடம் உன்னைக் கூட்டிக்கொண்டு போவன். 

பிரதீப் : அப்படியா நல்லது. நாளைக்குப்போகலாமா? 

துஷியந்தன் : போகலாம். நீ மறக்காமல் வரவேண்டும். அப்படி வரும்போது அம்மாவுக்கு என்ன சொல்லுவாய்? அம்மா உன்னைக் காணாமல் தேடுவாவே. 

பிரதீப் : ஓ.. ஓ… அதுவும் மெய்தான். எப்படி அம்மாவுக்குச் சொல்லலாம். (யோசித்தல்) ஓ. நாளைக்கு டொச் ரியூசன் இருக்கிறது. அந்த மாஸ்டரிடம் சொல்லிவிட்டு வருவன்.. ஓ.கே. 

காட்சி-2 

இடம் : தமிழ் வகுப்பு 

ஆசிரியை : திருமதி. ஜெயசேகரம் 

மாணவர்கள் : துஷிந்தன், துர்க்கா, சுகன்னியா, வித்யா, சர்மிளா, பிரதீப் 

ஆசிரியை : குட்மோணிங்! 

மாணவர்கள் : குட்மோணிங்! ரீச்சர். இன்று ஒரு புதிய மாணவன் வகுப்புக்கு வந்திருக்கிறார். (அதைச் சொல்வதற்கு எல்லோரும் நான்.. நான் என முந்துதல்) 

ஆசிரியை : (புதிய மாணவனைப் பார்த்து) எங்கே? இங்கே வாரும்! (மாணவன் எழும்பி வருதல்) உமது பெயர் என்ன? எங்கு இருக்கிறனீர்?

பிரதீப் : மைன் நாம் இஸ்ற் பிறதீப். இக் வோண் இன் டோற்மூண்ட் டேர்ண. 

ஆசிரியை : நீர் தமிழ்ப் பிள்ளை தானே. தமிழில் கதையும். ஏன் டொச்சில் பதில் சொல்கிறீர்? 

பிரதீப் : என்னுடைய எல்ரேன் தமிழ் கதைத்தால் வெக்கம் என்றும், கதைக்கக்கூடாது என்றும் சொன்னவர்கள். 

வித்யா : ஏன் ரீச்சர்! துருக்கி, போலந்து, மொறோக்கோ நாட்டுப் பிள்ளைகள் எல்லாம் டொச் லாண்டில் இருந்தாலும் தங்கட தாய்மொழியைக் கதைக்கிறார்கள். ஆனால் இவர் தான் இப்படிப் புதிதாகச் சொல்கிறார். 

ஆசிரியை : சரியாகச் சொன்னீர்! அதைத்தான் நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். 

துஷியந்தன் : ரீச்சர்! இவருக்கு இப்ப தமிழ் கதைக்கப் படிக்க விருப்பமாம். அவரின் அம்மா அப்பாவுக்குப் பயமாக இருக்குது என்று எனக்குச் சொன்னவர். என்னைத் தமிழ் சொல்லித் தரும்படி கேட்டவர். நான் எங்கட ரீச்சரிடம் படிக்கலாம் என்று உங்களிடம் கூட்டிக் கொண்டு வந்தனான். 

ஆசிரியை : நல்ல வேலை செய்துள்ளாய் துஷியந்தன்! இவரையும் உங்களுடன் சேர்த்து தமிழ் படிப்பிக்க எனக்கும் விருப்பம். எதற்கும் பிரதீப்பின் பெற்றோர் இதுபற்றி என்னுடன் கதைக்க வேண்டும். 

பிரதீப் : (பயத்துடன்) ரீச்சர்! நைன்! அம்மா இதுக்கு விடமாட்டா. எனக்கு ஹெனவ்வாகத் தெரியும் இக் வைஸ் டஸ். நான் அம்மா வுக்குத் தெரியாமல் தமிழை லெர்ணன் செய்வன்.

ஆசிரியை : அப்படி முடியாது பிரதீப்! பெற்றோரின் சம்மதம் இல்லாமல், அவர்களுக்குத் தெரியா மல் நான் எதையும் செய்ய முடியாது, செய்யக்கூடாது பிரதீபா. அவர்களின் சம்மதத்தைப் பெற்று அவர்களையும் கூட்டிக்கொண்டு வா! 

பிரதீப் : அது கேற் நிக்ற்ஸ். தமிழ் பூஹ்ஹர் ஐக் கண்டால் மூல் அயன்மருக்குள் போடும் அம்மா, எப்படி நான் தமிழ் படிக்க எலாவ்னஸ் தருவா? நீங்களே டெங்கன் செய்யுங்க! 

சர்மிளா : பாவம் பிரதீப் ரீச்சர்! அவர் தமிழ்தானே படிக்க ஆசைப்படுகிறார். எங்களுடன் படிக் கட்டும். நாங்கள் ஒருவரும் சொல்ல மாட்டோம். தமிழ்ப்பிள்ளைகளான உங்களுக்குத் தமிழ் தெரிய வேணும் என்று சொல்லும் நீங்கள், தமிழ்ப்பிள்ளை தமிழைப் படிக்க வரும்போது மாட்டேன் என்று சொல்லலாமா? 

ஆசிரியை : எம்மினத்துப் பிள்ளைகள் எல்லோரும் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்பது உண்மை. அதுதான் எனது இலட்சியமும். ஆனால் அறிவீனமான சில பெற்றோர்களை நான் ஒன்றும் செய்ய முடியாது. 

சுகன்னியா : ஏன் ரீச்சர்! இங்கு சில டொச் பிள்ளைகள் தமது பெற்றோருக்குத் தெரியாமல் சில செயல்களைச் செய்கிறார்கள். பிரதீப் செய்தால் என்ன? 

ஆசிரியை : என்ன? எங்கள் கலாச்சாரம் அப்படியில்லை. இப்படி ஒருவரும் நினைக்கக்கூடாது. 

சுகன்னியா : டொச் பிள்ளைகள் அப்படிச் செய் கிறார்கள். அதுதான்…. ரீச்சர்! இவர் எங்க ளுடன் இருந்து தமிழ் படித்தால் என்ன பிழை? நல்லதுதானே. 

ஆசிரியை : நீங்களே இப்படி ஆவலாக இருக்கும்போது நான் மறுக்கமுடியாது. படிக்கப்போகிறேன் என்று ஆர்வத்துடன் கேட்கும் ஒரு பிள்ளை யைத் தட்டிக் கழிக்க எனக்கு மனம் இடம் கொடுக்கவில்லை. 

சுகன்னியா : அதுதானே நல்ல ரீச்சர். பிரதீப்பின் முகத் தைப் பாருங்கள்! எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார். 

ஆசிரியை : பிரதீப்! எனக்கு என்ன பிரச்சினை வந்தாலும் உமது ஆவலைப் பூர்த்தி செய்யத் துணிந்துவிட்டேன். அது என் தாய் மொழிக்குச் செய்யும் சேவை எனவும் கருது கிறேன். உன் அம்மாவுக்கு என்ன சொல்லி விட்டு இங்கு வரப்போகிறாய்? 

பிரதீப் : அதுதான் எனக்குத் தெரியாது. ( சிறிது யோசித்துவிட்டு) ஓ. அயன ஈடி…. நான் ஒவ்வொரு நாளும் பின்னேரம் டொச் ரியூசனுக்குப் போறான். அதில் ரெண்டு நாளைக்கு இங்கு வருவன். 

சர்பினா : அப்படியென்றால் உமக்கு டொச் தெரியாமல் சொய்னெஸ்ஸில் குறைவாக எடுத்தால் அம்மா பேச மாட்டாவா? 

பிரதீப் : எனக்கு டொச் நல்லாத் தெரியும். மம்மாவின் நேர்வஸ் தாங்காமல் தான் அவவுக்காக கவுஸவ்காபவுக்குப் போறனான். 

ஆசிரியை : உங்கள் டொச் மாஸ்டருக்கு இதுபற்றிக்கூறி அவரின் அனுமதியைப் பெறவேண்டும். இல்லாவிட்டால் அவர் உமது அம்மாவிடம் மூன்றுநாள் ரியூசனுக்கு வருகிறவர் எனச் சொல்லிவிடுவார். எனவே பிரதீப்! நீர் உமது மாஸ்டரின் விருப்பத்தையும் பெற்றுச் சம்மதம் வாங்கிவர வேண்டும். இது இறுதி யாகக் கூறும் ஆலோசனை அதை நிறை வேற்று. ஓகே. 

(எல்லா மாணவர்களும் எழுதிக் கொண்டிருத்தல்) 

காட்சி-3

இடம் : டொச் ரியூசன் வகுப்பு

பாத்திரங்கள் : ஜேர்மன் ஆசிரியர், பிரதீப் 

ஆசிரியர் : என்ன பிரதீப்! இன்று நேரத்துக்கு வந்துவிட்டீர்! என்ன முகம் ஒரு மாதிரியாக இருக்கு? 

பிரதீப் : ஹேர். ஸ்மித்ட் எனக்கு எனது மூற்றர் ஸ்பிறாக வைப் படிக்க ஆசையாக இருக்கு. இக் மொக்ர ஹேர்ண. நீங்கள் கெல்ப் பண்ணுவீர்களா? 

ஆசிரியர் :என்ன பிரதீப்! எனக்கு தமிழ் தெரியாதே. நான் முன்னர் நாலைந்து வருடங்கள் இந்தியாவில் இருந்து ஆசியன் குல்றுவர் பற்றி ஆராய்ச்சி செய்தனான். தமிழ் கொஞ்சம் எனக்கு விளங்கும். ஆனால் உமக்கு சொல்லித்தர முடியாதே. 

பிரதீப் : நீங்கள்,யா, என்று சொல்லுங்கள்! அதுபோதும் நான் தமிழைப் படித்திடுவேன்.

ஆசிரியர் : எப்படி? என்ன புதிர் போடுகிறாய்? நீ நல்ல பையன் என்று எனக்குத் தெரியும். விடயத்தைச் சொல். 

பிரதீப் : (சிறிது தாமதித்து) நான் இனிமேல் மூன்று நாட்கள் தான் உங்கள் கிளாஸ்க்கு வருவேன். மிகுதி இரண்டு ராகவும் உங்களிடம் வருவதாகக்கூறி தமிழ்க் கிளாஸ்க்குப் போகப் போறேன். அதற்கு நீங்கள் அனுமதி தரவேண்டும். 

ஆசிரியர் : ஒ.கே. இது பெரிய விடயமா? உன்னுடைய வகுப்புக்கு மேல் உனக்கு டொச் அத்துப்படி உனக்கு நல்ல டொச் திறமை இருக்கிறது.

பிரதீப் : சரி சேர்! ஒன்றை மறக்க வேண்டாம். 

ஆசிரியர் : என்ன? எதைச் சொல்கிறீர்? 

பிரதீப் : மைன மூற்றருக்கு நான் அஞ்சு ராகவும் உங்களிடம் வருவதாகவே சொல்லுவேன். இந்த ஹெல்ப்பை நீங்கள் செய்தால் உங்களை என் வாழ்நாளிலே மறக்க மாட்டேன். 

ஆசிரியர் : முடியாது பிரதீப்! ஜேர்மன் சட்ட திட்டங்கள் ஒருமாதிரியானவை. சிறு பிள்ளையான உனக்கு ஆதரவளித்தால் என் தலை போய்விடும். 

பிரதீப் : பிரச்சினை ஒன்றும் வராது. உங்கள் வகுப்புக்கு வராமல் எத்தனை பிள்ளைகள், கட், அடித்திருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று நீங்கள் கவலைப்பட்ட துண்டா? வகுப்புக்கு வந்தால் உங்கள் பொறுப்பு. அப்படி வராவிட்டால்… எல்ரேனுக்கு அறிவிப்பீங்க. 

ஆசிரியர் : பிரதீப்! அப்படித்தான் செய்வேன். நீ நினைப்பது மாதிரி இது சின்ன விடயமல்ல. உன் தாய்மொழி ஆர்வத்தைப் பார்த்து, உன் வேண்டுகோளுக்கு மனமின்றியே சம்மதிக்கி றேன். காரணம், எந்த ஒரு பிள்ளையும் எங்கு வாழ்ந்தாலும் தாய்மொழி தெரிந்திருக்க வேண்டும்.தாய்மொழி தெரியாமல் எப்படிப் படித்தாலும் ஒரு முழுமை இருக்காது என்று எனக்குத் தெரியும். நானும் இங்குள்ள தாய் மொழியைப் படிப்பிப்பதால், தாய் மொழியின் பெருமை எனக்கு விளங்கும். இந்த ஒரு காரணத்தால் உமது விருப்பத் துக்கு இணங்குகிறேன். அதற்கு முன் உமது தமிழ் ஆசிரியையை நான் சந்திக்க ஏற்பாடு செய்வீரா? 

பிரதீப் : நாளைக்கு ஐந்து மணிக்கு உங்களை எனது தமிழ் ரீச்சரிடம் கூட்டிச் செல்வேன் 

ஆசிரியர் : ஓகே. இப்போ பாடத்தைத் தொடங்குவோம்.

(மாணவர்கள் எழுத… ஆசிரியர் உதவி செய்து கொண்டிருத்தல்) 

காட்சி-4

இடம் : தமிழ் வகுப்பு 

பாத்திரங்கள் : தமிழாசிரியை ஜேர்மன் ஆசிரியர், பிரதீப் 

ஜேர்மன் ஆசிரியர் : குடன்ராக்! 

ஆசிரியை : குடன்ராக்! 

ஜேர்மன்  ஆசிரியர் : பிரதீப்பின் விடயமாக உங்களிடம் இன்று வந்திருக்கிறேன். அவன் தமிழ் படிக்க மிக ஆவலாக இருக்கிறான். அதேவேளை பெற்றோருக்குத் தெரியாமல்தான் படிக்க விரும்புகிறான். காரணம் பெற்றோரின் அனுமதி தனக்குக் கிடைக்காது என்று அடித்துச் சொல்லி, அவர்களைக் கேட்க வேண்டாம் என்றும் கூறுகிறான். 

ஆசிரியை : ஓ…இதுபற்றி நானும் ஏற்கெனவே அறிந்துள்ளேன். ஒரு நல்ல காரியத்தைச் செய்ய விடாப்பிடியாக நிற்கும் இவனை மடக்கி அடிக்கிவிட எனக்கு விருப்பம் இல்லை. தாய்மொழியை மறந்துள்ள குடும்பத்தில் இவன் பிறந்து தாய் மொழிகளைக் கற்கத் துடிக்கும் இவனது ஆர்வத்தை நாம் பாராட்டி அதற்கு உதவி செய்யவேண்டும். 

ஜேஆசிரியர் : உண்மைதான். படிக்கத் துடித்துக் கொண்டி ருக்கும் இவனை நாம் அடக்கி வைப்பது கூடாது. வேகமுடைய நதிக்கு அணையிட்டால் விளைவு உடைத்துப் பாயும். அது போல இவனது ஆசை நிறைவேறவில்லை ன்றால், தனது டொச் படிப்பில் ஒரு சலி ப்பு வந்து அதில் அக்கறை குறையலாம். சிலவேளை ஒருவித மனநோயையும் இது ஏற்படுத்தக்கூடும். நல்ல திறமையுள்ள மாணவனை நாம் நல்வழிப்படுத்தவேண்டும். ஆனபடியால் கிழமைக்கு மூன்று நாட்கள் மாலை என்னுடைய பொறுப்பிலும் இரண்டு நாட்கள் மாலை உங்கள் பொறுப் பிலும் அவன் படிக்கட்டும். அவனது அறிவுப் பசிக்கு நாம் உணவளித்தல் பாரதூர மான குற்றமாகாது என்பது என் நம்பிக்கை. அத்தோடு அவனுக்குள்ள டொச் அறிவு என்னைப் பொறுத்தவரையில் பூரண திருப்தி. 

ஆசிரியை : நீங்கள் கூறியபடியே இந்த ஏற்பாட்டுக்கு நானும் உடன்படுகிறேன். எங்கள் இனப் பிள்ளைக்கு நீங்கள் காட்டும் அக்கறைக்கும் ஆதரவுக்கும் அன்புக்கும் அவன் பெற்றோர் சார்பாக நான் கடமைப்படுவதோடு நன்றியையும் தெரிவிக்கிறேன். இவ்வளவு நேரமும் பிரதீப்புக்காக ஒதுக்கியமைக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரிய வில்லை. 

ஆசிரியர் : :பரவாயில்லை… இது ஆசிரியரின் சேவை. பிரமாதமாக நான் ஒன்றும் பெரிதாகச் செய்யவில்லை. நன்றி. நான் போய் வருகிறேன். (பிரதீப்பைப் பார்த்து) பிரதீப்! நீ இந்த வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம்.

(பிரதீப் வகுப்பில் இருக்க ஆசிரியர் வெளியேறுதல். மாணவர்கள் பாடம் படித்தல்) 

காட்சி-5

இடம் : பிரதீப் வீடு 

பாத்திரங்கள் : பிரதீப், தாயார் 

தாய் : என்ன பிரதீப்! இன்று நேரம் செல்ல வருகிறாய்? எங்க போயிட்டு வாறாய்? வோ வார்ஸ் தூ? 

பிரதீப் : நான் டொச் ரியூசனுக்குப் போயிற்று வாறன்.

தாய் : முந்தி ப்றூவாக வாறனீ! இப்ப ஏன் ஸ்பேற்? அதுதான் கேட்கிறன். 

பிரதீப் : (பயத்தில் மனம் நடுங்க) லேறர் ஒரு ஆபைற் வைச்சவர். அதைக் கொறிக்கீறன் செய்து தர நேரம் போயிற்றுது. 

தாய் : சரி. சரி. ஓகே. கவனமாகப் படி டொச்சில படித்து நீ பெறூம்ய்ற ஆக வரவேணும். உனக்கு எல்லாம் றிக்ரிக் தானே? 

பிரதீப் : உனக்கு ஒரு வேலவும் இல்லை. நான் தான் இம்மர் டொச்சைப் படித்துப் படித்து நான் வகுப்பில் முதலில அன்வேற் சொல்லுவன். நிரஞ்சன், பிரசாந் எல்லோருக்கும் ஒன்றும் தெரியாது. 

தாய் : (அவனது கன்னத்தைத் தடவி) கெட்டிக் காரப் பிள்ளை. நீ அந்த தமிழ் யுங்ஸ் களோட சேராதே. பிறகு தமிழ்தான் வாய்க்குள்ள வந்து டொச்சை வேர்கேஸ் பண்ணிவிடும். உனக்கு டொச் கதைப்புத்தகம், கொம்பியூட்டர், கேம்போய் எல்லாம் வாங்கித் தருவன். தமிழ்ப் பெடியள் வந்தால் நீ விலகிப் போகவேணும். என்ன? என்ர கிளைன மொய்ஷன்…. 

பிரதீப் : யா மூற்றி! (முகத்தைச் சுழித்துக்கொண்டு) நீங்க யோசிக்காதீங்க! நான் டொச்சை மறக்க மாட்டேன். ஆனால் மூற்றி! எங்கட தமிழை நீங்கள் ஏன் வெறுக்கிறீங்கள்? நான் அதைக் கதைக்கப் பழகினால் என்ன? (பயம் கலந்த துணிவுடன் கேட்டல்) 

தாய் : அடிச்சுவிட்டான் படலையிலே. தமிழா? பிஸ்ற் தூ பெசொயற்? ஏனப்பா உனக்கு இவ்வளவு ஸ்பிறாக இருக்க தமிழில போய் விழுகிறாய்? பிரெஞ், இங்கிலீஸ், லத்தீன், யப்பானீஷ், துருக்கீஷ் என்று படியன். நான் சொல்லிப்போட்டன். இந்தக் கதையை நீ என்னோடு இனிக் கதைக்கக்கூடாது. நாடே இல்லாத தமிழைப் பற்றிக் கதைக்கிறாய். யாரும் தமிழ் பெடியனோட உன்னைக் கண்டால் உன் ஹொவ் கீழே உருளும் ஜாக்கிரதை! 

பிரதீப் : (நடுங்கிக் கொண்டு) இல்லை மூற்றி! தமிழ் என்ற வோற்றே எனக்கு வேண்டாம். அம்மா இன்று பின்னேரம் எங்கட ஆட்கள் வைக்கிற குற்றுவர் விழா இருக்குதாம் போவோமா? 

தாய் : என்ன கலைவிழாவா? எங்கட விழாவா? அங்கு என்னத்தைப் பார்க்கிறது? போய் உன் வேலையைப் பார்! ரி.வி.யில அதைவிட நல்ல புறொக்கிறாம் வரும். வா! இருவரும் சேர்ந்து பார்ப்போம். 

பிரதீப் : அப்படியா. சரி. (பிரதீப் ரீ.வியைப் போட்டு) மைக்கல் ஜக்ஷனின் பாட்டு சென்டுங் ஆகுது. 

தாய் : இந்தா நானும் பார்க்க வாறன்! என்ன மாதிரி தேகத்தை வளைத்த நிமிர்த்தி ஆடறான் பாவி. (கால் கையை ஆட்டியபடி ரசித்துக் கொண்டிருத்தல்) 

காட்சி-6

இடம் : தமிழ் வகுப்பு

பாத்திரங்கள் : மாணவர்கள் 

துஷியந்தன் : பிரதீப்! நீ வந்த கொஞ்ச நாளில், இப்ப தமிழில் எவ்வளவு கெட்டிக்காரனாகி விட்டாய் என்னென்று படித்தனீ? 

பிரதீப் : அம்மா அப்பா எல்லோரும் படுத்தபிறகு நான் தமிழ் எழுத்துக்களை ரீச்சர் சொன்ன மாதிரிப் பார்த்துப் பார்த்து எழுதிப் பழகிவிட்டேன். எனக்கு அது ஒரு புதிய கண்டுபிடிப்பை கண்டுவிட்ட மாதிரி சந்தோஷமாக இருக்கு. இதற்கெல்லாம் உனக்குத்தான் நன்றி சொல்லவேண்டும் துஷி. 

வித்யா : உமது தமிழ்ப் புத்தகங்களை உங்கட அம்மா ஒருநாளும் காணவில்லையா? 

பிரதீப் : இல்லை. எனக்கு தும் கொவ்வா? எல்லாம் மறைச்சு வைச்சிடுவேன். என்னுடைய சிம்மருக்கு (றூம்) அம்மா வரும்போது நான் டொச் புத்தகத்தை வைத்திருந்தால் காணும். அது என்ன என்று பார்க்கமாட்டா. 

வித்யா : பிரதீப்! எங்களைத் தமிழ் படிக்கச் சொல்லிக் கட்டாயப் படுத்தகிறா எனது அம்மா. ஆனால் எனக்கு தமிழ் வருகு தில்லை. உமக்கோ தமிழ் படிக்கவேண்டாம் என்ற கட்டாயம் இருக்க தமிழ் ஒழுங்காக வருகுது. நாங்கள் என்ன செய்வது? இனி நாங்கள் உம்மிடம் தான் கேட்டுப் படிக்க வேணும். 

பிரதீப் : அப்படிச் சொல்லக்கூடாது. நாங்கள் எல்லோரும் நன்கு படித்துக் கெட்டிக் காரராக எமது நாட்டுக்கும் வீட்டுக்கும் பெயர். தேட வேணும். 

வித்யா : நீர் பிறந்த ஜேர்மன் நாட்டுக்கா பேர் தேடப் போகிறீர்? 

பிரதீப் : ஜேர்மன் நாடா? அம்மா அப்பா இங்கு அகதிகளாக வந்தமையால் நானும் இங்கு பிறந்தேன். ஆனால் எங்கள் சொந்த நாடு தமிழீழம் தானே! இது எல்லாம் தமிழ் படிக்க வந்தபிறகுதான் எனக்கு வெளிச்சுது.

வித்யா : அதுதானே. ஜேர்மன் நாடுதான் உமது சொந்தநாடு என்றால் நீர் வெள்ளையாக இருக்கவேணும். நீரும் உமது அம்மாவும் நீங்கள் ஜேர்மன்காரர் என்று சொன்னாலும் சொக்கிளேட் – நேகுஷ் என்று உமது தோல் காட்டிக் கொடுக்கும். ஒறிஜினல் ஜேர்மன் பிள்ளைகள் உங்களை அவ்வாறுதானே சொல்வார்கள். இனி இப்படி நினைப்பதை மறந்துவிடு. 

பிரதீப் : ஓ. வித்யா! இதுகள் எல்லாம் நான் தமிழ்வகுப்புக்கு வந்த பின்னர்தான் நல்லாகப் புரிகிறது. 

சுகன்யா : உண்மை. உண்மை. நாங்கள் தமிழர்கள். எங்ககூட ஊருக்குப் போகவேணும். இங்கு நாசி என்றும் அவுஸ்லாண்டர் என்றும் எத்தனை பிரச்சினை? இதுக்குள்ள நாம் சந்தோஷமான வாழலாமா? நாங்கள் தனிய எங்கும் போக முடியாது. எங்களுடன் யாரும் துணைக்கு வரவேண்டும். அப்படிப் பயந்த நிலையில் இருந்து எத்தனை நாட்கள் என்று கழிப்பது? அதுதான் நமது நாட்டுக்கு நாம் போனால் எமது தாய்மொழியில் கதைக்கவேண்டும். தமிழ் தெரியாமல் தத்துப்பித்து என்று உளறுவதா? என்ன எதிர்ப்புக்கள் வந்தாலும் கட்டாயம் தமிழை அதாவது எம் தாய்மொழியை மறவாமல் கற்கவேண்டும். 

காட்சி-7

இடம் : பிரதீப் வீடு 

பாத்திரங்கள் : தாய், பிரதீப் 

தாய் : (பிரதீப்பின் றூமைத்தட்டி) பிரதீப்! ஆறுமணியாகி விட்டது. சத்தத்தைக் காணவில்லை. என்ன செய்கிறான்? 

பிரதீப் : (தாயின் குரல் கேட்டு, தமிழ்ப் புத்தகங்களை எல்லாம் மூடி ஒளித்துவைத்துவிட்டு) மூற்றீ வாறா. அம்மா வாறா என்று கூறியபடி றேடியோவைப் போட்டு, பாட்டுக்கு ஆடுதல் 

தாய் : (கதவைத் திறந்து) என்ன பிரதீப்! தனிய இருக்க லாங்வலீக் ஆக இல்லையா? நீ பாட்டுக்கு ஆடு! ஆடு! வடிவாகத்தான் இருக்கு. (தாய் றேடியோச்சத்தத்தைக் குறைத்து) இந்தப் பாட்டை இன்னும் வடிவாகப் பழகி ஆடுவதற்கு ஜேர்மன் பிள்ளைகளிடம் போய் கேட்டுப் பழகு! (எனக் கூறிக்கொண்டு அவன் அறையை நோட்டமிடுதல் புதிதாகச் சில தமிழ்ப் புத்தகங்கள் மேசையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் காணல்) 

தாய் : (கோபத்தோடு கண்கள் சிவக்க) டேய்! பிரதீப்! இதென்ன புத்தகங்கள்? (கையால் தட்டி விடுதல்) யார் உனக்குத் தந்தது? உன்னைப் பழுதாக்கிய முட்டாள் யார்? ஸ்ருப்பிட்! 

பிரதீப் : (அழுதுகொண்டு…. கதைக்கமுடியாமல்… விழுங்கிக்கொண்டு) இதுகள் துஷியந்தனின் புத்தகம் கொப்பி… மூற்றி! பிற்ற ஏஹே திக்ஸ்ற்! பிற்ற! 

தாய் : என்னட்ட நீ வாலாட்ட முடியுமா? உன்னை விட மூன்று மடங்கு மூத்த எனக்கு ஒளிக்கப் பார்க்கிறாய். (கொப்பியைக் காட்டி) இது உன்னுடைய எழுத்து. இதில உன்னுடைய பெயரும் இருக்கு! பொய் சொன்னால் என்னட்டைத் தவறமாட்டாய். செல்லப் பிள்ளையாக நான் வளர்த்து வாறன். அதைக் கெடுக்காமல் உண்மையைச் சொல்லு! 

பிரதீப் : (பயத்துடன் சொல்லமுடியாதவனாய்) அது… தமிழ்… துஷியந்தன் எனக்குச் சொல்லித் தாறவன். அவனிட்டத்தான் தமிழ் படிச்சனான். இப்ப படிக்கிறன். இனியும் படிக்க வேண்டும். ஆசையாக இருக்கு… (சொல்லிக்கொண்டு அழுதல்) 

தாய் : (கொப்பியை இன்னொரு தடவை பார்த்து விட்டு) பெரியாட்களின் எழுத்துப்போல திருத்தம் எல்லாம் செய்திருக்கிறது. இது துஷியந்தனின் திருத்தம் இல்லை. பிரதீப்! நேரத்தை வீணாக்காமல் என் கோபத்தை இன்னும் கிளறாமல் உண்மையைச் சொல்! பிரதீப்! 

பிரதீப் : அம்மா! நான் துஷியந்தனோடு ஒரு தமிழ் ரீச்சரிடம் படிக்கிறனான். 

தாய் : யாரது? அந்த ரீச்சர்? உனக்கு ஏன் படிப் பிச்சவா? யாரைக் கேட்டுப் படிப்பிச்சவா? அவவை நாலு கேள்வி கேட்கிறன். பெயரைச் சொல்லடா? எங்கே இருக்கிறா? அந்த பண்டிதையைக் காணவேணும். 

பிரதீப் : சிம்மல்வெக் -18 என்ற ஸ்ராஸ வில் இருக் கிறவா. அவவுக்குப் பெயர் பிறவ். ஜெயச் சந்திரன். அவ நல்லாப் படிப்பிக்கிறா. ஆசையாக இருக்கு அம்மா! 

தாய் : அடியடா செருப்பால! நான் அதையா உன்னிடம் கேட்டனான்? எப்ப தமிழ் படிக்கப் போனாய்? எத்தனை நாளாக இந்த நாடகம் நடக்குது? 

பிரதீப் : ஜேர்மன் ரியூசனுக்குப் போகாமல் தமிழ் வகுப்புக்குப் போனனான். மாஸ்டர் யா… என்று சொன்னவர் 

தாய் : என் ஆத்திரத்தை வளர்க்கிறாய்! எனக்குத் தெரியாமல் இப்படிச் செய்த உன்னைப் பார்க்கப் பார்க்க கோபமாக வருகுது. அது தானே வீட்டுக்குப் பிந்தி வருகிறாய் என்று புரியுது. இனி தமிழ்ப்புத்தகம், கொப்பி என்று ஏதும் கண்டால் கொலைதான் விழும். நாளைக்கு அந்த பண்டிதையைக் கூண்டில் ஏத்தாட்டி, நான் மிஸிஸ். இராஜ சேகரம் இல்லை. எதற்கும் விடியட்டும்.

காட்சி-8

இடம் : வக்கீல் ரூபியின் வீடு 

காலை எட்டுமணி 

பாத்திரங்கள் : ரூபி, திருமதி.இராஜசேகரம். 

இராஜசேகரம்: குட்மோணிங்! வக்கீல் அம்மா! குட்மோணிங்! 

ரூபி : ஒரு கேஸ் விடயமாக உங்களிடம் வந்திருக்கிறேன் மடம்! எனது மகள் டொச்சில நல்ல கெட்டிக்காரன். ஒழுங்காக டொச் படிச்சு வருகிறான். அப்படியிருக்க என்னுடைய மகனுக்கு தமிழ்மொழி, என்று ஏதோ ஒன்றைப் படிப்பித்துள்ளா ஒரு ரீச்சர். 

எப்போது படிப்பிக்கத் தொடங்கினா? உங்கள் அனுமதி இல்லாமலா? அப்படி இருந்தாலும் உங்கள் மகன் உங்கள் மொழி படித்தல் நல்லதுதானே. நட்டம் எதுவும் இல்லையே. 

இராஜசேகரம் : அப்படி எமக்கு தமிழ் படிக்கவேண்டும் என்ற தேவை இல்லை மடம். தமிழைப் படிப்பித்தால் அவனுக்கு டொச், பிரெஞ், இங்கிலீஸ் எல்லாம் குழம்பிவிடும். அவன் யூறப் பிள்ளை போல வளருகிறான். அவனுக்குத் தேவை இல்லை. அதுவும் என் அனுமதியின்றி படிப்பிக்க அந்த ரீச்சருக்கு எவ்வளவு துணிவு? 

ரூபி : உங்கள் அனுமதி இன்றிப் படிப்பிக்கிறா? அதற்கான பீஸ் பணம் பற்றி, பிரதீப் உங்களிடம் கேட்கவில்லை. அப்படி என்றால் என்ன? காரணத்துடன் கற்பித் திருப்பா?(யோசித்தல்) 

இராஜசேகரம்: எனக்குத் தெரியும். வீட்டில் அவ தனியாகத் தான் வசிக்கிறா. கடை… கிடை என்று போகவும் வீட்டுவேலை வாங்கவும், தனக்கு உதவியாக இருப்பான் என்றும் தமிழ் என்று ஆசையை ஊட்டியுள்ளார். 

ரூபி : அப்படியா விடயம்? இருக்கும்.. இருக்கும். பெற்றோர் அனுமதி இல்லாமல் எந்த ஒரு விடயத்தையும் மைனரான பிள்ளைகளுக்குத் திணிக்க முடியாது. 

இராஜசேகரம்: நல்லாகச் சொன்னீங்க மடம்! இதற்காக அவ்விடமிருந்து நட்டஈடு வாங்கித்தர வேண்டும். அப்பத்தான் அவவைத் திருத்தமுடியும். 

ரூபி : ஓகே. மிஸிஸ். இராஜசேகரம்! நீங்கள் இந்தப் போர்மில சைன் வையுங்கள்! கூடிய விரை வில் கோர்ட்டிலே அவவைச் சந்திப்போம்.

இராஜசேகரம் : தாங் யூ! மடம்! நான் வருகிறேன். 

ரூபி. : ஓ.கே. குட் பை. 

காட்சி-9

இடம் : நீதி மன்றம் 

பாத்திரங்கள் : நீதிபதி, வாதிவக்கீல், பிரதிவாதி வக்கீல், திருமதி. இராஜசேகரம் 

(குற்றம் சாட்டப்பட்ட வழக்கு, சிறுவன் ஒருவனுக்குப் பெற்றோர் அனுமதியின்றித் தமிழ் கற்பித்தமை) 

நீதிபதி : அமைதி! அமைதி!! அமைதி!!! 

இன்று இந்த நீதி மன்றத்திலே திருமதி. இராஜசேகரம் தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிக்கையின்படி ஆசிரியையான திருமதி. ஜெயச்சந்திரன் இன்னொருவர் மகனான பிரதீப்புக்கு தமிழைக் கற்பித்துக் குழப்பி யுள்ளார். ஒழுங்காக ஜேர்மன் கல்வி கற்று வந்த தன் மகன் இப்போது குழப்பமடைந்து, தமிழைப் படிக்கவேண்டும் என்று விடாப் பிடியாக இருக்கிறான் என்றும் கோபமடைந் துள்ளார்கள். அத்துடன் தமிழில் தமக்கு அக்கறை இல்லை என்றும், அதற்காக அவனைத் தமிழ்ப் பாடசாலை என்று கொண்டு திரிவதற்கும் நேரம் இல்லை யென்றும் கூறுகின்றார்கள். தமது மகனின் மனத்தை மாற்றிய அந்த ஆசிரியைக்குத் தகுந்த தண்டனை அளிப்பதுடன், நட்ட ஈடாக 10.000 மார்க் தரவேண்டும் என்றும் கூறுகிறார்கள். இந்த வழக்கிற்கு ஆஜராகி யுள்ள இருதரப்பு வக்கீல்களும் தமது விசாரணையை ஆரம்பிக்குமாறு பணிக்கின்றேன். 

வக்கீல் ரூபி : கனம் கோர்ட்டார் அவர்களே! 

திருமதி. இராஜசேகரத்தின் சார்பாக நான் வாதாடுவதற்கு உங்கள் அனுமதியை வேண்டுகின்றேன். 

நீதிபதி : பெமிஷன் கிறாண்டட்! புறொசீட்!

வக்கீல் ரூபி : தாங்யூ. யுவர் ஓனர்! மிஸிஸ். இராஜசேகரத்தின் ஒரே மகனான பிரதீப்பைத் தனது வீட்டில் வைத்து அவனது பெற்றோர் அனுமதியின்றி, தமிழ்ப்பாடத்தைச் சொல்லிக் கொடுத்தமை தவறு என உறுதி யாகக் கூறுகின்றேன். தான் படிப்பிக்கும் பிள்ளைகள் பத்து போதாது என்று இவனையும் சேர்த்துப் படிப்பித்துள்ளார். இப்படி பிரதீப்பைச் சேர்த்துப் படிப்பித்தால் தனது வகுப்புக்குத் தொடர்ந்து வருவான் என்றும், அதனால் ஒரு மாணவனின் பீஸ் காசு அதிகரிக்கும் எனவும் திட்டம் தீட்டியுள்ளார் அந்த ஆசிரியை திருமதி. ஜெயச்சந்திரன். 

மைனரான பிரதீப்பை பெற்றோரின் அனுமதியின்றித் தமிழ்ப் பாடம் மட்டுமல்ல, இன்னும் என்னென்ன கற்பித்திருப்பாரோ அந்த ஆசிரியை. சீ… ஆசிரியை என்ற பெயருக்கும் தொழிலுக்குமே களங்கம். நோட் திஸ் பொயின்ற் யுவர் ஓனர்!

நீதிபதி : யேஸ். யூ கான் புறொசீட்! 

(வக்கீல் சுதா குறுக்கிட்டு) 

வக்கீல் சுதா : ஒப்ஜெக் ன் யுவர் ஓனர்! 

எதிர்தரப்பு வக்கீல் நல்ல கற்பனை வளமுள்ள கவிஞர் போல இருக்கின்றார். நீதிமன்றம் என்பதை மறந்து, அரசசபை என்று நினைத்துவிட்டார் போலும். இந்த அறிவாளிகளை எல்லாம் உருவாக்குகின்ற எழுத்தறிவிக்கும் தெய்வமாக நின்று சேவை செய்யும் ஆசிரியப் பணிக்குக் களங்கம் கற்பித்து, தமது அறிவீனத்தை அம்பலப் படுத்துகிறார் எனது டிவென்ஸ் லோயர். 

நான் படிக்கவேண்டும் எனக்குச் சொல்லித் தாங்கோ என்று வந்து கேட்டால், அதைச் சொல்லிக் கொடுப்பதுதான் ஆசிரியையின் பணி. பிள்ளை ஆர்வமுடன் கேட்கும் கேள்விகளுக்கு அன்பாகப் பதில் சொல்லி விளங்க வைப்பதுதான் ஒரு ஆசிரியையின் சேவை. 

இங்கே கற்பிக்கும்போது ஒரு ஆசிரியரோ ஆசிரியையோ நல்லது கெட்டது அறிந்து பிள்ளையின் தரம் கண்டுதான் படிப் பிப்பார்கள். அந்தமாதிரியான இந்த ஆசிரியையின் செயலைக் குறை கூறுபவர் தன் ஆரம்பகால ஆசிரியர்களை எப்படி இவர் புறக்கணித்திருப்பாரோ? பாவம். தற்ஸ் ஒல்! 

வக்கீல் ரூபி : த டிபென்ஸ் லோயர் இஸ் றையிங் ரூ த ரேபிள் யுவர் ஓனர்! எதிர்த் தரப்பு வக்கீல் தன் வாதத்தை என் பக்கம் திருப்புகிறார். பிரதீப்புக்குப் பெற்றோர் அனுமதியின்றித் தமிழ் சொல்லிக் கொடுக்கப்பட்டது குற்றம் என்பதுதான் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு என்பதை எதிர்த்தரப்பு வக்கீலுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். 

யுவர் ஓனர்! இராஜசேகரத்தின் பிள்ளைக்கு, ஒரு அந்நிய நாட்டில் ஜேர்மன் மொழியைக் கற்கும் பிள்ளைக்குத் தமிழைக் கற்பித்துக் குழப்பியுள்ளமை பெரிய தவறு தாய்மொழி என அவன் பெற்றோர்கள் ஜேர்மன் மொழியையே நாளும் பொழுதும் கற்பித்து வரும்போது தமிழையே தாய்மொழி என்று கூறி கற்பித்தமை மன்னிக்க முடியாத குற்றம். சிறுபிள்ளையின் மனதில் இப்படியான ஒரு மொழிச் சலனத்தை ஏற்படுத்தியுள்ளார் இந்த ஆசிரியை. அத்தோடு பிள்ளை வீட்டுக்குத் தாமதித்து வந்தமைக்கும், அதனைக் காணாது திருமதி.இராஜசேகரம் அவதிப்பட்டதையும் மீட்டுப் பார்க்க முடியாத வேதனைகள்! 

தமது தொழிலைப் பரீட்சித்துப் பார்க்க வெளிநாட்டில் பணக்காரப் பிள்ளை பிரதீப் தான் கிடைத்தானா? இப்படிப் பாடம் சொல்லிக் கொடுப்பது போல் கூப்பிட்டு, வீட்டுவேலை செய்விக்கலாம் என்ற கபடநாடகம் தான் இது. 

வக்கீல் சுதா : எக்யூஸ்மி யுவர் ஓனர்! 

ஐ ஆம் அட்வகேற் சுதா. பீ.ஏ. எல்.எல்.பி. (B.A., L.L.B.) என்று நான் பெருமையாகக் கூறிக் கொள்ளக் காரணம் என்னைப் படிப்பித்த ஆசிரிய ஆசிரியைகளே. அறியாப் பருவத்தில், விளையாட்டுப் பருவத்தில் ஒரு பிள்ளையை அணைத்து அஆ- சொல்லிக் கொடுக்கிறாரே ஒரு ஆசிரியை. இந்தத் தொழிலுக்கு உலகில் ஒரு தொழிலும் ஈடாகாது. உலகம் போற்றும் விஞ்ஞானிக்கும் கல்வி புகட்டியவர்கள் ஆசிரியர்களே. 

திருமதி. இராஜசேகரம் தனக்குள் ஏதாவது கோபத்தைத் தீர்த்துக் கொள்ள, இப்படி ஆசிரியரைக் கூண்டில் ஏற்றத் திட்ட மிட்டுள்ளார். அப்படி என்றால் ஏற்கெனவே தமிழைப் படித்துவரும் பிள்ளைகளையும் தமிழைப் படிக்காது நிறுத்தலாம் என்றும் இந்த நாடகத்தை நடிக்கின்றார். அந்நிய நாட்டில் வாழ்ந்தாலும் தமிழே எம் தாய்மொழி என்றும் அதை நிலைநிறுத்திப் புகட்டிவருபவர் எனது கட்சிக்காரர். தமிழ்மீது பற்றுக் கொண்ட ஆசிரியையான திருமதி. ஜெயச்சந்திரன் எம் தாய்மொழி யைச் சொல்லிக் கொடுத்ததில் தவறில்லை என்றும் அது அவரது தலையாய கடமை என்றும், பிரதீப் கேட்டமையாலேயே தமிழைச் சொல்லிக் கொடுத்தார் என்றும் கூறி, என் வாதத்தை முடிக்குமுன், திருமதி. இராஜசேகரத்திடம் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன். அதற்கு உங்கள் அனுமதியை வேண்டுகிறேன். 

நீதிபதி : ஜேஸ் யு கான் புறொசீட். 

புறொசி கியுட்டர் : திருமதி.இராஜசேகரம்! திருமதி. இராஜ சேகரம்! திருமதி. இராஜசேகரம்! நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை. 

திருமதி. இராஜ சேகரம் : நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத் தவிர வேறில்லை. 

வக்கீல் சுதா : உங்கள் மகனுக்கு உங்கள் அனுமதியின்றி, தமிழ் படிப்பித்தமை குற்றம் என்று கூறு கிறீர்கள். அத்துடன் அதற்கான நட்ட ஈட்டையும் கேட்கிறீர்கள்! 

திருமதி. இராஜ சேகரம் : ஆமாம்! அவவைச் சும்மா விடக்கூடாது. என்னுடைய மகனைப் பழுதாக்கிவிட்டா.

வக்கீல் சுதா : உங்கள் தாய்மொழி எது? 

திருமதி. இராஜசேகரம் : தமிழோ இழவோ என்வோ தான.. அது எங்களுக்கு விருப்பம் இல்லை. 

வக்கீல் சுதா : அப்படி என்றால் தமிழர்களாக இருந்தும் தாய்மொழியை வெறுக்கிறீர்கள். இது புதுமையாக இருக்கிறது. நல்ல மொழிப் பற்று உங்களுக்கு? 

வக்கீல் ரூபி : மை லோர்ட்! எதிர்த்தரப்பு வக்கீலின் கேள்வி சுய கௌரவத்தை இழிவுபடுத்துகிறது. இதை ஆட்சேபிக்கிறேன். 

நீதிபதி : அநாவசியமான கேள்விகளை விட்டு நேரடியான கேள்விகளைக் கேட்கலாம். 

வக்கீல் சுதா : தாங்யூ மை லோர்ட்! 

பிள்ளைகளில் அக்கறையான நீங்கள், பிரதீப் தானாகத் தமிழ் எழுத.. பேசக் கற்றுக் கொண்டமை உங்களுக்குத் தெரியாமல் இருந்தது விசித்திரமாக இருக்கிறது. இதிலி ருந்தே உங்களுக்கும் பிள்ளைக்கும் உள்ள இடைவெளி எவ்வளவு என்று தெரிகிறது. 

திருமதி.இராஜசேகரம் : அப்படி இல்லை. ஜேர்மன் ரியூசனுக்கு என்று சொல்லிவிட்டு, அந்த நேரத்தை வன் பயன்படுத்தியிருக்கிறான் என்று இப்பதான் தெரிகிறது. 

வக்கீல் ரூபி : மை லோர்ட்! ரியூஷனுக்கு என்று பிரதீப் சொல்லிவிட்டுப் போனால் அவன் எங்கே போகிறான் என்று உளவறிய வேண்டிய தேவை மிஸிஸ். இராசசேகரத்துக்கு இல்லை. தேவையற்ற சந்தேகங்கள்! 

வக்கீல் சுதா : தேவை இருக்கிறது மை லோர்ட்! பிள்ளை களைப் பெற்று சாப்பாடு கொடுத்து, வளர்த்துப் பாடசாலைக்கு அனுப்பி விட்டால் மட்டும் பெற்றோரின் கடமை முடிந்துவிடுவதில்லை. பிள்ளைகளை எந்நேரமும் அவர்களுக்குத் தெரியாமல் அவர்கள்மேல் கண்காணிப்பாக இருக்க வேண்டும். அதை மறந்துவிட்டு… 

வக்கீல் ரூபி : ஐ ஒப்ஜெக் ன் யுவர் ஓனர்! 

மிஸ் சுதாவுக்கு…. எங்கே தான் தோற்று விடுவேன் எனப் பயம் வந்திருக்கிறது. அதுதான் சுற்றிவளைத்துப் பேசிக் கொண்டிருக்கிறார். 

நீதிபதி : ஓர்டர்! ஓர்டர்!! கோட்டில் சட்ட நுணுக்கப்படி பேசும்படி இருதரப்பினரை யும் கேட்டுக் கொள்கிறேன். 

வக்கீல் சுதா : மிஸிஸ். இராஜசேகரம் உங்களுக்குத் தெரியாமல் தமிழ் படிப்பித்தமை குற்றம் என்கிறீர்கள். ஆனால் பிரதீப் உங்கள் சம்மதம் கேட்டால் அனுப்பி வைப்பீர்களா? 

திருமதி. இராஜசேகரம் : இல்லை.. தமிழ் எமக்குத் தேவை இல்லை. 

வக்கீல் சுதா : தமிழைப் படிப்பிக்க ஆர்வமாயுள்ள பிள்ளையை நீங்கள் பாழாக்கலாமா? பிற்காலத்தில் பெரியவனான பின்பு தமிழைப் படிப்பிக்கவில்லை எனப் பிரதீப் உங்களைக் கேட்டால்… 

திருமதி. இராஜசேகரம் : அது எங்கள் சொந்த விஷயம்.

வக்கீல் சுதா : உங்களுக்கு திருமதி. ஜெயச்சந்திரனை முன்பு தெரியுமா? ஏதாவது தனிப்பட்ட விரோதங்கள் உண்டா? 

திருமதி. இராஜசேகரம் : இல்லை. அவவை எனக்குத் தெரியாது. பிரதீப் சொல்லி அவவின் பெயரைக் கேள்விப்பட்டேன். இப்போதுதான் அவவை நேரடியாகப் பார்க்கிறேன். 

வக்கீல் சுதா : பிரதீப்புக்கு எப்படித் தெரியும்? 

திருமதி. இராஜசேகரம்: அவனது நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டான். 

வக்கீல் சுதா : ஜேர்மன் ரியூசன் மாஸ்டர் உங்களிடம் இதுபற்றி… அதாவது பிரதீப்பின் வரவு ஒழுங்கீனம் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லையா? 

திருமதி. ராஜசேகரம்: அப்படி அவர் ஏதும் அறிவிக்கவில்லை. இதற்கு உடந்தை போலத் தெரிகிறது.

வக்கீல் சுதா : ஆக… பெற்றோர்கள் இதற்கு உடந்தை இல்லை போல் தெரிகிறது. நோ மோர் குவெஷ்னர்ஸ் ஓனர்! 

வக்கீல் ரூபி : கனம் கோர்ட்டார் அவர்களே! நான் பிரதீப்பைச் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்.

நீதிபதி : ஜேஸ். யூ கான் புறொசீட்!

வக்கீல் ரூபி :தாங் யூ மை லோர்ட்! 

(பிரதீப்பைப் பார்த்து) பிரதீப்! பயப்படாமல் உண்மையைச் சொல்ல வேண்டும். உமது ஆசிரியை உம்மைன் கூப்பிட்டாவா? நீயாகப் போனீரா? 

பிரதீப் : நானாகத்தான் போனேன். எனது சிநேகிதர்கள் தமிழைப் படித்து எழுதுவதைக் கண்டு எனக்குப் படிக்க ஆசை வந்தது.

வக்கீல் ரூபி : அப்படி என்றால் ஏன் அம்மாவிடம் கேட்டு அவவின் அனுமதியுடன் போய்ப் படித்திருக்கலாமே. உமக்கு அம்மா எதுவிதக் குறையும் விடமாட்டா அல்லவா? 

பிரதீப் : அம்மாவுக்கு தமிழ் பிடிக்காது என்று எனக்குத் தெரியும். அதனால சம்மதமும் தரமாட்டா என்றும் தெரியும். அதனாலதான் அவவுக்கு இதை நான் சொல்லவில்லை. சொன்னால் எனக்கு அடி கிடைக்கும் என்ற பயம். (அழுதல்) 

வக்கீல் ரூபி : தமிழைப் படித்தால் உமக்கு ஜேர்மன் மொழி படிக்கும்போது கஸ்டமாக இருக்கும். இரண்டு மொழியும் கலந்து இரண்டிலும் கவனம் போனால் (மாக்ஷ்) குறையும் அப்படித்தானே. 

பிரதீப் : தமிழ் படிப்பதால் எனக்கு குழப்பம் இல்லை. தமிழ் படிக்க என ஒரு நேரத்தை… நான் ரி.வி. பார்க்காமலும் கேம் போய் விளையாடாமலும் ஒதுக்கி வைத்தேன். தமிழ் படிப்பது எனக்கு படம் கீறுவது போல இன்ரஷ்ட் ஆக இருக்கும். 

வக்கீல் ரூபி : அம்மாவுக்குத் தெரியாமல் சின்னப்பிள்ளை நீர் இப்படிச் செய்யலாமா? 

பிரதீப் : அது எனக்குக் கவலைதான். ஆனால் நான் கள்ளம் கபடம் கூடாத செயல் எதுவும் செய்யவில்லையே. ஏன்ற சிறு துணிவு இருந்தது. படம் கீறல் போல சுகமாகப் படித்தேன். தமிழ் எனக்குத் தானாக வந்தது. துஷி என்ற நண்பன் எனக்கு உதவி செய்தான். 

வக்கீல் ரூபி : உமது இந்தச் செயல் ஒருநாளைக்கு அம்மாவிடம் பிடிபட்டால் என்ன நடக்கம் என்று பயந்து பயந்து இருக்கவில்லையா?

பிரதீப் : ஓ… அப்படிப் பயந்து கொண்டுதான் இருந்தனான். அம்மா கோபத்தால் தடி எடுத்து அடிப்பா! பிறகு என்ற பிரதீப் கண்ணே! என்று இரங்கி அணைப்பா! நான் அவவின் லீப்லிங்ஸ் கிண்ட். எல்லாம் எனக்குத் தெரியும். அம்மா.. அம்மாதான் என் று நானும் நினைத்து அம்மா அடிப்பதை மறந்து விடுவேன். பிறகு பழையபடி அம்மா அன்பாக இருப்பா என்று தெரியும். 

வக்கீல் ரூபி : ஆசிரியை உமக்கு ஏதாவது விளையாட்டுப் பொருட்கள் தந்தவவா? அவ உம்மிடம் கடை- மாக்கற் என்று பொருட்கள் வாங்கிக் கொடுத்தாயா? பீஸ் காசு எவ்வளவு கேட்டவா? 

பிரதீப் : அப்படி ஒரு வேலையையும் அவவுக்குச் செய்யவில்லை. பீஸ் காசு என்று ஒரு காசுமே கேட்கவில்லை. காசு கேட்டிருந்தால் இந்த விடயம் அம்மாவுக்குத் எப்பவோ தெரிந்திருக்கும். அதுவும் இல்லை. 

வக்கீல் ரூபி : நோர் மோர் குவெஷ்னர்ஸ் 

தீர்ப்பு 

நீதிபதி : இருதரப்பு வாதங்களையும் நாம் ஒப்புநோக்கி ஆராய்ந்தபோது மைனரான பிரதீப்பை திருமதி. ஜெயச்சந்திரன் தமது வீட்டில் அவனது பெற்றோர் அனுமதியின்றி வைத்திருந்தமை குற்றமே. அப்படி இருந்தாலும், இந்தக் குற்றம் செய்வதற்கான சூழ்நிலையை உற்றுநோக்கின் தமிழ்மொழி யாம் தமிழைக் கற்பிக்கவே இந்த மணித்தியாலங்கள் பயன்படுத்தப்பட்டிருக் கின்றன என்பது பிரதீப்பின் வாக்கு மூலத்திலிருந்து தெரியவருகின்றது. 

நாம் தமிழர்கள். எனவே தமிழ்மொழியைப் படிப்பதிலோ படிப்பிப்பதிலோ எதுவித குற்றமும் இல்லை என்பதையும் சில தமிழர்கள் இங்கு ஜேர்மனியர் போல் வாழ்ந்தாலும் எப்போதாவது ஒருநாள் தாய்நாட்டுக்கே மீண்டும் போய்வாழ வேண்டும் என்பதையும், அப்படி அங்கு வாழும்போது இங்கிருந்து போகும் சிறுவர்களுக்குத் தமிழ்மொழி தெரிந் திருத்தல் அவசியம் என்பதை மனதிற் கொண்டு, குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை திருமதி. ஜெயச்சந்திரன் மீது தாக்கல் செய்த இவ்வழக்கை இந் நீதிமன்றம் நிராகரிக் கின்றது. அத்துடன் தாய்மொழிப்பற்று இல்லாமல் அறிவீனமான நிலையில் ஒரு அர்த்தமே இல்லாத வழக்கைக் தொடுத்து, நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை விரயமாக்கிய திருமதி. இராஜசேகரத்தை ஜேர்மன் மொழிச்சட்டம் இலக்கம் 25:3ம் பிரிவின்படி இந்நீதிமன்றம் எச்சரிக்கை செய்கின்றது. 

தமிழ்மொழியை எந்த இடத்திலும் எந்தச் சூழலிலும் கற்பித்துள்ள இவ்வாசிரியையின் சேவையை இந்நீதிமன்றம் பாராட்டுவதுடன் இவர் போன்று ஜெர்மனியில் உள்ள சகல தமிழ் ஆசிரியர்களும் தமது பணியினைச் செய்யவேண்டும் எனவும் எல்லாப் பெற்றோர்களும் தம் பிள்ளைகளுக்கும் தமிழைக் கற்பிக்க முன்வரவேண்டும் எனவும் இந்நீதிமன்றம் வேண்டிக் கொள்கிறது. 

இத்துடன் நீதிமன்றம் கலைகிறது.

– சிறார்களுக்கான சிறு நாடகங்கள், முதல் பதிப்பு: 1999, மணிமேகலை பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *