நீராம்பல் பூ

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 26, 2024
பார்வையிட்டோர்: 379 
 
 

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

செல்வனும் செல்வியும் ஒரு நாள் குளத்திற்குச் சென்றார்கள். குளத்தில் ஆம்பல் பூ பூத்திருந்தது. தண்ணீரின் இடையில் அது தலை தூக்கி நின்ற காட்சி அவர்கள் மனத்தைத் தொட்டது. 

அப்போது வெயில் காலம். குளத்தின் நீர் நாளுக்கு நாள் வற்றிச் சுருங்கிக் கொண்டிருந்தது. பத்து நாள் கழித்து அவர்கள் குளத்தின் பக்கம் சென்றபோதும், அந்த நீராம்பல் தண்ணீரில் தலை தூக்கி நின்றது. 

“செல்வீ,பார்த்தாயா! பத்து நாளைக்கு முன் தண்ணீர் உயரத்தில் நின்ற போது, இந்த நீராம்பல் பூவும் உயரத்தில் நின்றது. இப்போது தண்ணீர் இறங்கிய பின், அதுவும் இறங்கி விட்டது!” என்றான் செல்வன். 

“செல்வா, அது மெல்லிய பூங்கொடிதானே! அதனால் எப்படி நிமிர்ந்து நிற்க முடியும்? அதனால் தான் தண்ணீரோடு இறங்கி விட்டது!” என்றாள் செல்வி. 

குளத்தில் நாளுக்கு நாள் தண்ணீர் வற்றிக் கொண்டே வந்தது. செல்வனும் செல்வியும் வரும் போதெல்லாம் அந்த நீராம்பல் பூவைப் பார்க்காமல் போக மாட்டார்கள். அதுவும் தண்ணீர் இறங்க இறங்கத் தானும் இறங்கிக் கொண்டே வந்தது கடைசியில் குளம் மிக மிக வற்றிச் சேறும் சகதியு மாகி விட்டது. அப்போதும் அந்த ஆம்பல் பூ அந்த சகதிக் குழம்பின் மேல்தான் நின்றது. உயரமாக நீட்டிக் கொண்டு நிற்கவில்லை. 

இன்னும் இரண்டு மூன்று நாட்களில் மழை பெய்யாவிட்டால், குளம் வறண்டு போகும் என்று பெரியவர்கள் பேசிக் கொண்டார்கள். குளம் வறண்டு போனால், ஆம்பலும் கருகிப் போகுமே என்று செல்வனும் செல்வியும் வருந்தினார்கள். 

அன்று ஒருநாள் இரவு மழையடித்து ஊற்றியது. அந்த மழையில் குளம் நிரம்பி விட்டது. ஐயோ, பாவம்! குளத்தில் இருந்த பூ தண்ணீருக்குள் அமுங்கி அழுகிப் போயிருக்கும் என்று குழந்தைகள் பேசிக் கொண்டார்கள். அவர்கள் மறுநாள் காலையில் குளக்கரைக்கு வந்து பார்த்தபோது, ஆம்பல் பூ தண்ணீருக்கு மேலே தலை நீட்டிச் சிரித்துக் கொண்டு நின்றது. 

“பூ அழுகவில்லை!” என்று மகிழ்ச்சியோடு கூவிக் குதித்தார்கள் குழந்தைகள். 

கருத்துரை :- நீர் எந்த அளவு நிற்கிறதோ, அந்த அளவு தான் நீராம்பல் பூவும் நிற்கும். ஒருவன் எந்த அளவு நூல்கள் கற்றிருக்கிறானோ, அந்த அளவுதான் அவ னுடைய கூரிய அறிவும் அமைந்திருக்கும். 

– நல்வழிச் சிறுகதைகள் – இரண்டாம் பாகம், முதற் பதிப்பு: ஜனவரி 1965, வானதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *