நெஞ்சகமும் வஞ்சகமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 20, 2024
பார்வையிட்டோர்: 91 
 
 

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

ஒரு காட்டில் எருது ஒன்று இருந்தது. அந்தக் காட்டின் ஒரு பகுதியில் பச்சைப்பசேல் என்று புல் மண்டிக் கிடந்தது. எருதுக்குத் தான் இருக்கும் இடத்தில் கிடைத்த புல்லே போதுமானதாக இருந்தது. எனினும், தூரத்துப் புல்லே கண்ணுக்கு அழகாக இருந்ததால், புல் மண்டிக் கிடந்த பகுதியை நோக்கி ஒரு நாள் புறப்பட்டது. 

அது போகும்போது, மரத்தில் இருந்த பச்சைக் கிளி அதைக் கூப்பிட்டது. “எருதண்ணா, எங்கே போகிறீர்கள்?’ என்று கேட்டது பச்சைக்கிளி. “எதிரில் உள்ள புல்வெளிக்குப் போகிறேன்; புதுப் புல் தின்னப் போகிறேன்” என்றது காட்டெருது. 

“அண்ணா, வேண்டாம்; அங்கே புலியிருக்கிறது!” என்று எச்சரித்தது பச்சைக்கிளி. 

அப்போது அங்கே ஒரு நரி வந்து சேர்ந்தது 

அது பச்சைக்கிளியைப் பார்த்து, “ஒருவர் ஒரு வேலையாகப் போகும்போது எங்கே போகிறீர்கள் என்று கேட்பதே தவறு ; மேலும் எருதண்ணா ஆசையாகப் புதுப்புல் தின்னப் போவதைத் தடுப்பது சரியில்லை. அங்கே புலியிருக்கிறது என்று. சொல்லி அவரை பயமுறுத்துவது மிகமிகத் தவறு. புல்வெளியிலே புலியிருப்பதில்லை. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்று நீ கேள்விப்பட்ட தில்லையா? அப்படியே புலியிருந்தாலும் எருதண்ணாவின் கொம்பு அதன் குடலைக் கிழித்து விடாதா? எருதண்ணாவை நீ என்னவென்று நினைத்துக் கொண்டாய்?” என்று கேட்டது. 

நரியின் பேச்சைக் கேட்ட எருதுக்குக் கிளியின் மேலே கோபம் கோபமாக வந்தது. தன் வீரத்தைப் பாராட்டிய நரியோடு பேசிக்கொண்டே அது. புல்வெளியை நோக்கிச் சென்றது. 

புல்வெளியில் அது இன்பமாக மேய்ந்து கொண் டிருந்தபோது நரி அங்கிருந்து நழுவியது] புல்வெளியில் ஒரு புறத்தில் மறைந்திருந்த கிழட்டுப் புலி எருதின் மேல் பாய்ந்து அதைக் கொன்று தின்றது. நரியும் அதன் குருதியைக் குடித்து மகிழ்ந்தது. 

சாகும்போதுதான் எருதுக்கு அறிவு வந்தது. பச்சைக்கிளியின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல், நரியின் நயவஞ்சகத்திற்கு இரையானதை எண்ணி வருந்தியது. 

கருத்துரை:- வஞ்சகமில்லாதவர்கள் சொல்லும் கடுஞ் சொல்லும் நன்மையைத் தரும். வஞ்சகரின் இன்சொல்லோ துன்பத்தையே தரும். 

– நல்வழிச் சிறுகதைகள் – முதல் பாகம், முதற் பதிப்பு: ஜனவரி 1965, வானதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *