கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 11, 2024
பார்வையிட்டோர்: 133 
 
 

(1887ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-15 | அத்தியாயம் 16-30 | அத்தியாயம் 31-45

16. புவனேந்திரன் தன்னைத் தானறிதல் 

இந்தக் கடிதத்தைப் பார்த்தவுடனே புவனேந்திரனுக் குண்டான மலைப்புந் திகைப்பும் மனோ விசாரமும் இவ்வள வென்று விவரிக்க நாம் சக்தியுள்ளோம் அல்லேம். சில நாளாய் அவனுடைய மனசிலே யிருந்து வாளாயுதம்போல் அறுத்துக்கொண்டு வந்த சந்தேகத்தை அந்தக் கடிதம் அதிகரிக்கச் செய்தது. அதனோடு இன்னொரு காரணமுங் கூடச் சேர்ந்தது. அஃது யாதென்றால், என்ன விசேஷம் நடந்தாலும் அதைக் குரு சிரேஷ்டர் புவனேந்திரனுக்குச் சொல்லாமல் மறைக்கிற வழக்கமில்லை. அந்த அந்நிய ஸ்திரீயின் சங்கதியைப்பற்றி மட்டும் அவர் தன்னிடத்தில் ஒன்றுங் கலந்து பேசாமல் மௌனமாயிருந்ததைக்கொண்டு அவனுடைய சந்தேகம் அதிக பலங்கொண்டு வேரூன்ற இடமாயிற்று. இப்படிப்பட்ட பல ஹேதுக்களால்,தான் தாய் தகப்பனற்ற அநா தப் பிள்ளையென்று புவனேந்திரன் நிச்சயித்துக்கொண்டு, அது முதல் சரியான ஆகாரமும் நித்திரையும் சந்தோஷ சம்பாஷணமுமில்லாமல் நாளுக்கு நாள் தேகம் மெலிய ஆரம்பித்தான். குரு சிரேஷ்டர் அவனுடைய முகவாட்டத்தையும் தேக மெலிவையும் பார்த்து ஆச்சரியமடைந்து அவனைக் கட்டித் தழுவிக் கொண்டு, “அப்பா! குழந்தாய்! நீ சிலகாலமாய் ஏதோ மன வருத்தத்தைக் கொண்டிருப்பதாக எனக்கும் உன் தாயாருக்கும் விளங்குகிறது. அதற்குக் காரணம் இன்ன தென்று நீ தெரிவிக்க வேண்டும்” என்றார். அவன் அதற்குச் சரியான மறுமொழி சொல்லாமல் தப்பித்துக் கொள்ளப் பிரயாசப்பட்டும், குரு சிரேஷ்டர் விடாதபடியால், அவன் அழுதுகொண்டு அவன் சட்டைப் பையிலிருந்த அந்த அநாமதேயக் கடிதத்தை எடுத்து, அவர் கையிலே கொடுத் தான். அவர் அந்தக் கடிதத்தை வாசித்துப் பார்த்த வுடனே திடுக்கிட்டுத் திகைத்துச் சற்றுநேரம் சிலைபோல் அசைவற்றிருந்தார். 

17. குருசிரேஷ்டர் ஆறுதல் சொல்லல். 

பிறது தமது மனதைத் தேற்றிக் கொண்டு புவனேந் திரனுடைய கண்ணீரைத் துடைத்து “அப்பா! யாரோ துன்மார்க்கர்கள் கெட்ட எண்ணத்துடன் அந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறார்கள். நீ அதற்காக மனம் வருந்த வேண்டாம்” என்றார். உடனே புவனேந்திரன் “அவர்கள் எந்த எண்ணத்துடன் எழுதியிருந்தாலும் அவர்கள் எழுதிய சங்கதி வாஸ்தவமாகத் தோன்றுகிறதே” என்றான். பொய் யென்பதே அறியாத சத்திய வாசகரான குரு சிரேஷ்டர் இவ்வளவு நடந்தபிறகு இனி உண்மையை மறைக்கிறது சரியல்லவென்று நினைத்து, ஆதியில் புவனேந்திரன் குழந்தைப் பருவமாயிருக்கும்போது அவனை ஒரு அந்நியன் கொண்டுவந்து கொடுத்ததும், அது முதல் தாம் வளர்த்தது முதலான விவரங்களையெல்லாம் அவனுக்குத் தெரிவித்து, மறுபடியுஞ் சொல்லுகிறார்: “அந்த மனுஷன் உன்னை மகாராஜா புத்திரனென்று சொன்னதால் புவனேந்திரன் என்று உனக்குப் பெயரிட்டோம். அவன் சொன்னது வாஸ்தவமென்று அநேக அநுமானப் பிரமாணங்களினாலும் காக்ஷிப் பிரமாணங்களினாலும் அறிந்து கொண்டோம். உன்னுடைய குணாதிசயங்களை யோசிக்குமிடத்தில் உன்னைப் பிள்ளையாக உடையவர்களுக்கு எவ்வளவோ பெரிய மேன்மை. 

மகன் தந்தைக் காற்றும் உதவி இவன் தந்தை
என்னோற்றான் கொல் என்னுஞ்சொல். (திருக்குறள் 66) 

என்ற குறளின்படி இப்படிப்பட்ட சர்வோத்கிருஷ்டமான பிள்ளையைப் பெற்றவர்கள் எவ்வளவு பாக்கியசாலிகளா யிருக்க வேண்டும்? அந்தப் பாக்கியத்துக்கு நான் அபாத் திரனாய்ப் போய்விட்டாலும் உன்னைப் பாலப் பருவமுதல் வளர்க்கும்படியான பெருமை எனக்குக் கிடைத்ததற்காக நான் எவ்வளவோ சந்தோஷ முள்ளவனா யிருக்கிறேன். பெற்றோர்களென்றும் பிள்ளைகளென்றும், அண்ணனென்றும் தம்பியென்றும். பதியென்றும் பாரியென்றுஞ் சொல்லப் படுகிற சகல பாந்தவ்வியங்களுக்கும் பக்ஷமே முக்கிய ஜீவாதாரமாயிருக்கிறது. பக்ஷமில்லாவிட்டால் அந்தப் பாந்தவ்வியங்களினால் பிரயோஜனமென்ன? உன்னிடத்தில் எனக்கும் என் மனைவிக்கும் உள்ள அன்பு இவ்வளவென்று நீயே அறிவாய். எங்களிடத்தில் உனக்குள்ள அன்பு இவ்வள வென்று நாங்களும் அறிவோம். ஆகையால் மனோவியாகுலத் துக்கு இடங்கொடுக்கவேண்டாம் அப்பா!” என்றார். 

இதைக் கேட்டவுடனே புவனேந்திரன் குரு சிரேஷ்டரை நோக்கி “ஐயா! எவ்வளவுதான் தவஞ் செய்தாலும் உங்களுக்குச் சமானமான தந்தை தாயார்கள் யாருக்காவது கிடைப்பார்களா? அந்தப் பாக்கியத்துக்கு நான் கொடுத்து வைக்காமற் போனது எனக்கு எவ்வளவோ பெரிய மனஸ் தாபமாயிருக்கிறது. அல்லாமலும் பால்குடிக்கிற பிள்ளையைக் கைவிடுகிற தாய் தகப்பன்மார்கள் எப்படிப்பட்டவர்களாய் இருக்கவேண்டுமென்று நினைக்கும்போது எனக்கு அளவற்ற வியாகுலமாயிருக்கிறது” என்றான். உடனே குரு சிரேஷ்டர் “உலகத்தில் எத்தனையோ அதிசயங்கள் நடக்கின்றன. காரணமில்லாமல் ஒரு காரியமும் நடவாது. அப்படியே இதற்கும் தகுந்த காரணமிருக்கவேண்டும். சகலமும் சீக்கிரத்தில் வெளியாகும். நீ வீணாய் வியசனப் படாதே அப்பா” என்றார். 

18. சுகுண சுந்தரி அவதூறு பேசிய தன் தாதியைக் கண்டித்தல் 

குரு சிரேஷ்டர் புவனேந்திரனுக்கு எவ்வளவோ ஆறுதல் சொல்லியும் நீர்மேல் எழுதிய எழுத்துப்போல ஒன்றும் பயனில்லாமற் போய்விட்டது. சுகுண சுந்தரி தன்னைப்பற்றி என்ன நினைப்பாளோ! அவள் முகத்தில் எப்படி விழிக்கிறதென்கிற நாணத்தினால் அவளைச் சிலகால மாய்ப் பாராமலேயிருந்துவிட்டான். அவர்களிருவருக்கும் முக தரிசனமில்லாமற் செய்ய வேண்டுமென்கிற மதுரேசனு டைய மனோரதம் இப்பொழுது நிறைவேறியதால் அவனும் அவனுடைய தகப்பனும் பரம சந்தோஷமுள்ளவர்களானார் கள். அவர்கள் இதுதான் தக்க சமயமென்று நினைத்து அந்த எளிய ஸ்திரீ புவனேந்திரனைத் தன் பிள்ளையென்று சொன்னது வாஸ்தவமென்றும், அதை நன்றாய் விளங்காமல் குரு சிரேஷ்டர் அவளை அநியாயமாய்த் துரத்திவிட்டதாக வும் சுகுண சுந்தரியின் காதில் விழும்படி செய்வித்தார்கள். சுகுண சுந்தரி •அப்படிப் பிரஸ்தாபித்த தன் தாதியை நோக்கிச் சொல்லுகிறாள்: 

19. அவதூறைப் பற்றி ஓர் பிரசங்கம் 

குரு சிரேஷ்டர் அநியாயஞ் செய்தாரென்று சொல்வது. தர்மமே அதர்மஞ் செய்ததென்று சொல்வதற்குச் சமானமா யிருக்கிறது.  நிர்த்தோஷமான மகான்கள் மேலே நிந்தைகூறுவது எத்தன்மையதென்றால் சூரிய கிரணத் தைத் திரட்டி அதன் மேலே கரியைப் பூச யத்தனப்படுவது போலும். உலகத்தில் யாராயிருந்தாலும் ஒருவர்மேலும் சில சமயங்களில் நிந்தை பேசக்கூடாது. ஏனென்றால் நல்லவர்களும் தீயவர்கள் போலத் தோன்றுகிறார்கள். அவர் களுடைய அந்தக்கரணங் கடவுளுக்குத் தெரியுமேயல்லாது மானிடர்கள் அறியார்கள். ஒருவன் செய்த குற்றத்தை அவனுக்கு நேரே தெரிவித்தாலுந் தெரிவிக்கலாமே யல்லாமல் அவனில்லாதவிடத்தில் பறை சாற்றக் கூடாது. அநேகர் தங்களுடைய பிராணனைப் பார்க்கிலும் கௌரவத்தைப் பெரிதாக எண்ணுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நாம் அகௌரவத்தை உண்டுபண்ணுவது எவ்வளவு பெரிய அக்கிரமம்! அநேகர் தங்களுடைய நற்கீர்த்தியைக் கொண்டு ஜீவிக்கிறார்கள். அவர்களுடைய நற்கீர்த்திக்குப் பங்கஞ் சொல்லுவது அவர்களுடைய ஜீவனத்தைக் கெடுப்பதற்குச் சமானமல்லவா? ஒருவனுடைய வாய்ப்பிறப்பைக்கொண்டே அவன் நல்லவனென்றும் கெட்டவனென்றும் அறிந்து கொள்ளலாம். எப்படியென்றால் வாசனா திரவியங்களிலிருந்து பரிமளம் உண்டாவது போல் நல்லவர்கள் எப்போதும் நன்மையைப் பேசுவார்களே யன்றி ஒருவர் மீதும் நிந்தை கூறார்கள். அங்கணத்திலிருந்து அசுத்தங் கசிவதுபோல் தீயர்களே தீமையான வார்த்தைகளைப் பேசுவார்கள். கடுங் காற்றுக்கு எதிரே நின்று நாம் பிறர் காறியுமிழ்கிற உச்சிஷ்டம் நம் மேலே திரும்பிவிழுகிறதுபோல நாம் பிறர் மேற் சொல்லும் நிந்தனை நம்மையே சாருகின்றது. திருட்டுச் சொத்தைக் கொள்ளுகிறவன் இல்லாவிட்டால் ஒருவனும் திருடமாட்டான். ஆகையால் கோள் சொல்லு கிறவனைப்போலவே கோளைக் காது கொடுத்துக் கேட்கிறவனுந் தோஷாரூடனாகிறான். ஒருவனுடைய அயோகிக் யத்தைப்பற்றி நாம் நியாயசபையிலே சாக்ஷி சொல்லும் போதுமட்டும் நாம் உண்மையைச் சொல்லக் கடமைப்பட்டி ருக்கிறோம். அல்லது ஒருவன் அயோக்கிய னென்று தெரியாமல் அவனை ஒருவன் நம்பி மோசம் போகிற சமயமா யிருந்தால், அப்போது அவனுக்கு மட்டும் நமக்குத் தெரிந்த உண்மையை அறிவிக்கலாம். இப்படிப்பட்ட சமயங்கள் தவிர மற்ற எந்தச் சமயங்களிலும் நாம் பிறர்மேல் நிந்தை கூறக்கூடாது. ஒருவனுடைய செய்கைக்கு நமக்குக் காரணந் தெரியாமலிருக்குமானால் அவன் நல்ல எண்ணத்துடனே அந்தச் செய்கையைச் செய்திருப்பானென்று நாம் ஊஹிக்க வேண்டும். ஏனென்றால் ஒருவனுடைய செய்கை முந்தி நமக்கு விபரீதமாகக் காணப்பட்டாலும், பிறகு அது நிர்த்தோஷமான செய்கையென்று அநேக சமயங்களில் கண்டுபிடிக்கிறோம். அதற்கு உதாரணமாக ஒரு ஊரில் நடந்த சங்கதியை விவரிக்கிறேன். 

20. ஒரு துரைசானி கதை 

சில வருஷங்களுக்கு முன் ஒருவருக்கொருவர் அறிமுக மில்லாத பல பேர்கள் ஒரு அஞ்சல் வண்டியின் மேலே ஏறிக் கொண்டு பல ஊர்களுக்குப் பயணம் போனார்கள். வழியில் இராக்காலம் சமீபித்ததால் சோர பயத்தைக்குறித்துப் பேசிக் கொண்டு போனார்கள். அப்பொழுது ஒரு கனவான் தன் கைவசத்திலிருந்த பத்துத் தங்க நாணயங்களை யெப்படிப் பத்திரப்படுத்த வேண்டு மென்று மற்றவர்களை நோக்கிச் சொன்னான். அவனுக்குச் சமீபத்திலிருந்த ஒரு துரைசானி, “அவைகளை உம்முடைய பாதரக்ஷையில் வைத்துப் பத்திரப் படுத்தலாமே” யென்றாள். அவன் அப்படியே அந்தத் தங்க நாணயங்களைப் பாதரக்ஷையில் வைத்து மறைத்தான். பிறகு சற்று நேரத்துக்குள் ஒரு திருடன் வந்து, பணப்பைகளைக் கொடுக்கும்படி கேட்டான். அப்போது அந்தத் துரைசானி “என்னிடத்தில் பணமில்லை; அதோ அந்தத் துரையினுடைய பாதரக்ஷைகளைச் சோதித்தால் பத்துத் தங்க நாணயங்கள் அகப்படும்” என்றாள். அவன் அந்தப்படி சோதித்து, அகப் பட்ட தங்க நாணயங்களைக் கவர்ந்துகொண்டு போய்விட் டான். அவன் போன பிறகு அந்தத் துரைசானியை அந்தக் கனவான் வாயில் வந்தபடி தூஷித்தான். உடனே அந்த ஸ்திரீ அவனையும் மற்றவர்களையும் நோக்கி “நீங்கள் தயை செய்து நாளைக்கு என் வீட்டில் விருந்து சாப்பிடுவீர்களானால் உங்களுக்கு உண்மையைத் தெரிவிக்கிறேன்” என்றாள். அந்தப் படி மறுநாள் சம்பிரமமாய் அவர்களெல்லோரும் விருந் துண்டபிறகு, அந்தத் துரைசானி தன் கையிலிருந்த புஸ்தகத் தைக் காட்டி “அநேக ஆயிரம் தங்க நாணயம் மதிப்புள்ள கடித நாணயங்கள் இந்தப் புஸ்தகத்திலிருக்கின்றன. அந்தத் திருடனுக்கு இந்தத் துரையினிடமிருந்த தங்க நாணயங்களை நான் தெரிவிக்காமலிருந்தால், அவன் இந்தப் புஸ்தகத்தி லுள்ள கடித நாணயங்களை யெல்லாம் கவர்ந்துகொண்டு போயிருப்பான். இந்தத் துரை என்னாலே இழந்த பத்துத் தங்க நாணயங்களுக்குப் பதிலாய் நூறு தங்க நாணயங்கள் கொடுக்கிறேன். அவர் வேண்டாமென்றாலும் நான் விடமாட்டேன்” என்று சொல்லி நூறு தங்கநாணயங்களை அவருக்குக் கொடுத்தாள்.உடனே எல்லாரும் பரம சந்தோஷ மடைந்து, அந்த ஸ்திரீயினுடைய சாமர்த்தியத்தையும் உதார குணத்தையும் புகழ்ந்து கொண்டாடினார்கள்”  என்றாள். 

21. பாம்பின் கதை 

மறுபடியும் சுகுண சுந்தரி அந்தத் தோழியை நோக்கி “புறங்கூறலைப்பற்றி ஒரு சிறிய கதை சொல்லுகிறேன், கேள். ஒரு காலத்தில் ஒரு மனி தனைக் கடிக்க ஒரு நாகம் துரத்திற்று. அந்த மனிதன் அந்த நாகத்தை நோக்கி, “நாகமே! உனக்கு ஒரு தீமையுஞ் செய்ததில்லையே. என்னைக் கடித்துக் கொல்வ தினால் உனக்கு வரும் பிரயோஜனம் என்ன? சிங்கம், புலி முதலிய துஷ்ட மிருகங்கள் மாமிச பக்ஷணிகளாகையால் அவைகள் மனிதர்களைக் கொல்ல நியாயமிருக்கின்றது. அப்படிப்பட்ட நியாயமில்லாமல் வீணாக என்னையேன் கொல்லத் துரத்துகிறாய்?” என்றான். அதற்குப் பாம்பு ‘இந்தக் கேள்வி என்னைக் கேட்க வேண்டாம். உன்னுடைய வர்க்கத்தாரையே கேள். உங்களுக்கு யாதொரு தீங்குஞ் செய்யாதவர்கள்மேலே நீங்களே அவதூறு பேசி ஒருவரை யொருவர் கெடுத்துக் கொள்ளவில்லையா? அந்தக் குணம் உங்களிடத்திலிருக்கிறவரையில் என்னுடைய குணத்தை நானும் விடேன்” என்றது என்றாள். 

சுகுண சுந்தரி அவதூறு பேசின தன் தாதியைக் கண்டித் ததைக் குறித்து, குரு சிரேஷ்டரும் புவனேந்திரனும் கேள்விப் பட்டுக் களிகூர்ந்தார்கள். பிறகு குரு சிரேஷ்டர் புவனேந் திரனை நோக்கி “பாம்பு முதலிய விஷ ஜந்துக்களும் துஷ்ட மிருகங்களும், இடி, பெருங் காற்று, பெரு மழை, பஞ்சம், படை நோய் முதலியவைகளும் மனிதனைத் தண்டிக்கிற ஆயுதங்களாயிருக்கின்றன. உலகத்தில் தோட்டி முதல் தொண்டமான் வரையில் சகலரும் அக்கிரமஞ் செய்கிறார் கள், இப்படிப்பட்ட மனிதர்களுக்கு எப்படி வெயில் எரிக்கிறது எப்படி மழை பெய்கிறது என்று ஒரு ஆப்பிரிக்காதேசத்தான் ஆச்சரியப் பட்டதுபோல நாமும் ஆச்சரியப்பட வேண்டிய தாயிருக்கிறது. 

22. உலகத்தில் நடக்கிற அக்கிரமங்கள் 

பெருமையிற் சிறந்த அலெக்சான்டர் (Alexander the Great) என்னும் அரசர் திக்கு விஜயஞ் செய்யப்போனபோது, ஆப்பிரிக்கா தேசத்திலே ஒரு தூரமான ஊரில் குடிசைகளில் வசித்துக்கொண்டிருந்த சில ஜனங்களிடத்துக்குப் போனார். அவர்கள் அந்த அரசனைத் தங்களுடைய தலைவனுடைய குச்சுக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். அந்தத் தலைவன் அலெக்சான்டருக்கு மிக்க உபசரணை செய்து, தங்கத்தினாலே செய்யப்பட்ட சில பழவர்க்கங்களையும் தங்கத்தினாலே செய்யப்பட்ட போஜனத்தையும் அவர் முன்பாகக்கொண்டு வந்து வைத்தான். “நீங்கள் இந்த ஊரில் தங்கம் சாப்பிடுகிற வழக்கமா?” என்று அலெக்சான்டர் கேட்க,  அந்தத் தலைவன் “நாங்கள் தங்கம் சாப்பிடுகிற வழக்கமில்லை. நீங்கள் ஏதுக்காக இவ்வளவு தூரம் வந்தீர்கள்?” என்று வினவ, அலெக்சான்டர், “உங்களுடைய தேசாசாரங்களையும் வழக்கங்களையும் அறிய வந்தேன்” என்றார். “அப்படியானால் உங்களுக்கு இஷ்ட முள்ள காலம் வரையில் இவ்விடத்திலிருக்கலாம்” என்று அந்த ஊர்த் தலைவன் சொன்னான். 

அவர்கள் அப்படி பேசிமுடிந்த உடனே, இரண்டு வழக்காளிகள் அந்தத் தலைவனிடத்துக்கு வந்தார்கள். அவர்களில் வாதி தலைவனை நோக்கி, “ஐயா! நான் பிரதி வாதியிடத்தில் சில நிலம் கிரயத்துக்கு வாங்கினேன். அதில் ஆழமாய் நான் வடிகால் வெட்டினபோது, ஒரு பெரும் புதையல் அகப்பட்டது. அந்தப் புதையலுக்கு நான் பாத்தி யஸ்தன் அல்ல. ஏனென்றால் பிரதிவாதியிடத்தில் நான் நிலம் மட்டும் வாங்கினேனே தவிர, புதையலுக்கு விலை கொடுத்து வாங்கவில்லை. அப்படியிருக்கப் புதையலை பிரதி வாதி அங்கீகரிக்க மாட்டேன் என்கிறான்” என்றான். உடனே பிரதிவாதி “நியாயாதிபதியே! வாதியைப் போலவே எனக்கும் மனோசாக்ஷி யிருக்கின்றது. நிலத்தையும் அதிலுள்ள சகல பொருள்களையும் நான் வாதிக்கு விக்கிரயஞ் செய்து போட்டதால், அந்தப் புதையலுக்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை” என்றான். அந்தத் தலைவன் இருவருடைய வாதங்களையும் நன்றாய்க் கேட்டுத் தெரிந்து கொண்டு, உபயவாதிகளையும் நோக்கி “உங்களில் வாதிக்கு ஒரு மகனும் பிரதிவாதிக்கு ஒரு மகளுமிருப்பதால் அவர்களிரு வருக்கும் விவாகஞ் செய்வித்து, அந்த நிக்ஷேபத்தை அவர் களுக்குச் செளதாயமாகக் கொடுத்து விடுங்கள்” என்று தீர்மானித்தான். அந்த நியாயமான தீர்மானத்தைக் கேட்டு அதிசயித்துக் கொண்டிருந்த அலெக்சான்டர் அரசனை, அந்தத் தலைவன் நோக்கி “உங்களுடைய ஊரில் இந்த வழக்கு எப்படித் தீர்மானிக்கப்படும்?” என்று கேட்க “எங்களுடைய ஊரில் உண்மையாகவே உபயவாதிகளையும் பிடித்துக் காவற் கிடங்கில் வைத்துவிட்டுப் புதையலை அரசன் பிடுங்கிக் கொள்ளுகிற வழக்கம்” என்று அலெக் சான்டர் மறுமொழி சொன்னான். உடனே அந்தத் தலைவன் மிகவும் ஆச்சரியமடைந்து, “ஐயா! உங்கள் ஊரில் வெயில் எரிக்கிறதா? மழை பெய்கிறதா?’ என, அலெக்சான்டர் ‘ஆம் ஆம்” என்றார். “அப்படியானால் உங்கள் ஊரிலுள்ள ஆடு,மாடுகளுக்குப் புல், பூண்டுகள் வேண்டுமே! அதற்காக மழை பெய்கிறதும் வெயில் எரிக்கிறதுமே யல்லாமல் உங்களுக்காக அல்ல” என்று அந்தத் தலைவன் சொல்ல அலெக்சான்டர் நாணங்கொண்டு எழுந்துபோய் விட்டார்” என்றார். 

23. மதுரேசன் சௌரியத்தைக் காட்டப்போய் மானபங்கப்பட்டது 

புவனேந்திரன் குரு சிரேஷ்டருடைய புத்திரன் அல்ல வென்று தெரிந்த உடனே சுகுண சுந்தரிக்குப் பெரிய ஆச்சரியமுண்டான போதிலும், மனிதர்களது மேன்மையுந் தாழ்மையும் அவரவர்களுடைய யோக்கியதையைப் பொறுத்ததே யல்லாமல் பிறப்பினால் ஒன்றுமில்லையென்பது அவளுடைய சித்தாந்தமாதலால், அவளுக்குப் புவனேந்திரன் மீதுள்ள மதிப்பும் விசுவாசமும் எவ்வளவுங் குறையவில்லை. முதல் மந்திரியும் அவன் மகனும் புவனேந்திரனுக்குப் பல வகையில் தீங்கு தேடுகிறார்களென்று தெரிந்து, அவர்களைச் சுகுண சுந்தரி அதிசுமதிகமாய் மனசுக்குள்ளே வெறுக்க லாயினாள். அவளுடைய தரிசனத்தையுஞ் சல்லாபத்தையும் மதுரேசன் சுத்தமாய் இழந்துவிட்டதால் அவளுடைய பிரியத்தைச் சம்பாதிக்கிறதற்கு என்ன உபாயஞ் செய்யலா மென்று அவன் ஆலோசித்துக் கொண்டிருக்கையில், அவன் தகப்பன் வந்து, மைந்தனை நோக்கிப் “புருஷர்கள் தங்களுடைய கல்வியினாலாவது அழகினாலாவது அல்லது சௌரியத்தினாலாவது ஸ்திரீகளை வசியஞ் செய்ய வேண்டும். கல்வியும் அழகும் உன்னிடத்தில் குறைவாயிருப்பதால், நீ உன்னுடைய சௌரியத்தைக் காட்டிச் சுகுண சுந்தரியைக் கைவசப்படுத்த வேண்டும்” என்றான். மதுரேசன் இது நல்ல உபாயமென்றெண்ணி, அதற்குத் தக்க சமயந்தேடிக் கொண்டிருந்தான். அப்படிப்பட்ட சமயம் வாய்க்காமை யால், தானே ஒரு சமயத்தை உண்டுபண்ணிக் கொள்ள ஆரம்பித்தான். 

24. பொய்க்கொள்ளை மெய்க் கொள்ளையானது 

எப்படியெனில் உள்ளூரிலும் பிற ஊர்களிலும் உள்ள வறியவர்களையும் பிணியாளர்களையும் விசாரிக்கச் சுகுண சுந்தரி சில சமயங்களில் வெளியே போகிறது வழக்கம். அப்படிப்பட்ட தருணங்களில் ரதசாரதியையும் தன்னுடைய பிராண சகியையும் தவிர வேறொருவரையும் அவள்கூட அழைத்துக்கொண்டு போகிற வழக்கமில்லை. அங்ஙனம் அவள் பிற ஊர்களுக்குப் போகிற சமயத்தில் மதுரேசன் சில துஷ்டர்களை யேவிவிட்டு, அவளை வழியில் வளைத்துக் கொண்டு வழிப்பறி செய்வதுபோலப் பாவனை பண்ணும்படி யாகவும், அந்தச் சமயத்தில் தான் வந்து அவர்களை அடித்துத் துரத்தி, அவளுக்குத் தன் பராக்கிரமத்தைக் காட்டுகிறதென்றும் மதுரேசன் தனக்குள்ளே நிச்சயித்துக் கொண்டு தன் கருத்தைச் சில துஷ்டர்களுக்குத் தெரி வித்தான். சர்வஜன ரஞ்சனியான சுகுண சுந்தரியைப் போலியாய் உபத்திரவிக்கக்கூட ஒருவருஞ் சம்மதிக்கவில்லை. ஆனால் இரக்கமென்பதை எள்ளளவும் அறியாத சில பரம சண்டாளர்கள் திரவியாபேக்ஷையினால் அந்தக் கொடிய செய்கைக்குடன்பட்டு, ஒருநாள் சுகுண சுந்தரி ஒரு அந்நிய கிராமத்துக்குப் போய்த் திரும்பி வருகிற சமயத்தில் நடு வழியில் அவளை வளைத்துக் கொண்டார்கள். அவளும் அவளு டைய சகியும் தரித்துக் கொண்டிருந்த விலைமதிக்கக் கூடாத ஆபரணங்களைப் பார்த்த உடனே, விளையாட்டுச் சண்டை வினைச்சண்டையானது போல் அந்தத் துஷ்டர்கள் போலித் தன்மையை விட்டு விட்டு, மெய்யாகவே வழிப்பறி செய்ய ஆரம்பித்தார்கள். அத்தருணத்தில் மதுரேசன் ஒரு குதிரை யின் மேலேறிக் கொண்டு அவர்களைக் கழியினால் ஓங்கியோங்கி அடித்தான். அந்தக் கொடியவர்களுக்கு மெய் யாகவே மூர்க்காவேச முண்டாகி, அவன் மேலே பாய்ந்து, குதிரையினின்று அவனைக் கீழே தள்ளிக் கையாலும் கழிகளா லும் பரிபூரணமாகப் புடைத்தார்கள். அவன் ஒரு நிமிஷத் தில் போன இடந்தெரியாமல் ஓடி ஒளிந்து கொண்டான். பிறகு அந்தத் தீயர்கள் சுகுண சுந்தரியின் ஆபரணங்களைக் கழற்ற யத்தனப்படுஞ் சமயத்தில், புவனேந்திரன் தினந் தோறும் அசுவாரூடனாய் வெளியே சாரிப்போகிற வழக்கப்படி, அந்த மார்க்கமாய்த் தன் பாட்டில் சாரிபோய்க் கொண்டிருந்தான். 

25. புவனேந்திரனின் பராக்கிரமம் 

அப்பொழுது அவன் சுகுண சுந்தரிக்கு நேரிட்ட அபாயத்தைக் கண்டு, அந்தத் துஷ்டர்களின்மேற் பாய்ந்து அவனுடைய யுத்தாப்பியாச வீரத்தொழிலை அவர்களிடத் திற் பூரணமாய் உபயோகித்தான். அவர்கள் அவனோடு எதிர்த்து நிற்கமாட்டாமல் ஓடிப்போய்விட்டார்கள். அப் பொழுது சுகுண சுந்தரி பயத்தினால் மெய்சோர்ந்து, பிரக்ஞா பங்கமாயிருந்தமையால் தன்னுடைய ஆபத்தைத் தீர்த்து ரக்ஷித்தவர்கள் இன்னாரென்று அப்போது அவளுக்குத் தெரியாது. பிறகு புவனேந்திரன் சுகுண சுந்தரியின் ரதத்தை நடத்தும்படி சாரதிக்கு உத்தரவு செய்து, தானுங் கூடச் சென்று, ரதம் நகரத்துக்குள் பிரவேசித்தவுடனே தன் கிரகத்துக்குப் போய்விட்டான். சுகுண சுந்தரி தன்னுடைய அரமனைக்குட் சென்று, மூர்ச்சை தெளிந்தவுடனே புவனேந் திரனுடைய வீரச் செய்கையைத் தோழி மூலமாய்க் கேள்விப் பட்டு, மிக்க ஆச்சரியமும் ஆனந்தமுமடைந்தாள். அரசனும் அதைக் கேள்வியுற்று, அதிக வியப்புடனே குரு சிரேஷ்டரை நோக்கி, “புவனேந்திரன் செய்த உபகாரத்துக்கு நான் என்ன பிரதி உபகாரஞ் செய்யப்போகிறேன்? இந்த உலக முழுமை யும் அவனுக்குச் சம்மானமாய்க் கொடுத்தாலும் போதாதே!” என்று மிகவும் புகழ்ந்து கொண்டாடினான். 

சுகுண சுந்தரியை வழிப்பறி செய்ய யத்தனித்த அந்தத் துஷ்டர்கள் மதுரேசன் ஆதியில் ஒப்புக்கொண்டபடி தங்க ளுக்கு வெகுமானஞ் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். அவன் அவர்களை நோக்கி, “நீங்கள் போலிக் கொள்ளையை விட்டுவிட்டு, உண்மையான கொள்ளை யிற் பிரவேசித்ததுமன்றி, என்னையும் அடித்து உபத்திரவஞ் செய்தமையால் நான் உங்களுக்கு ஒன்றுங்கொடேன்’ என்றான். அவர்கள், “நீ தக்க சம்மானஞ் செய்யா விட்டால் அந்த வழிப்பறிக்குக் காரணம் நீதானென்று அரசனுக்குத் தெரிவிப்போம்” என்று பயமுறுத்தினார்கள். அவன் பயந்து கொண்டு, அவர்கள் கேட்டுக் கொண்டபடி யதேஷ்டமாய்ப் பொருள் கொடுத்து, அவர்களைச் சமாதானப்படுத்தினான். அவர்கள் மறுபடியும் அவர்களுக்குப் பணம் வேண்டும் பொதெல்லாம் அவனை அச்சுறுத்திப் பணம் பிடுங்கிக் கொண்டு வந்தார்கள். இவ்வாறு அவனுடைய துன்மார்க்கப் பிரயத்தனம் அவனுக்குத் துன்பத்தையும் அவமானத்தையும் பண விரயத்தையும் உண்டுபண்ணினதுமன்றிப் புவனேந் திரனுக்குக் கீர்த்தியாய் முடிந்தது. 

அந்தத் துஷ்டர்கள் சுகுண சுந்தரியை மார்க்கத்தில் வளைத்துக்கொண்டபோது மதுரேசனுந் தனக்குச் சகாயமாய் வந்து, அடிபட்டானென்று கேள்விப்பட்டு, சுகுண சுந்தரி அவனிடத்தில் கொஞ்சம் அநுதாபமுள்ளவளாயிருந்தாள். இதை மதுரேசன் கேள்வியுற்று, அந்தச் சமயத்தில் அவளு டைய தாதிகளில் சிலரைப் பொருள் மூலமாய்க் கைவசப் படுத்திக்கொண்டு, தன்னைப்பற்றிச் சுகுண சுந்தரியிடத்தில் அவர்கள் எப்போதும் புகழ்ச்சியாய்ப் பேசும்படி திட்டம் செய்தான். அங்ஙனம் ஒரு நாள் ஒரு தாதி அவனைக் குறித்து அபரிமிதமாய் மெச்சிப் பேசியபோது, அது பொய்யென்று தெரிந்து கொண்டு, சுகுண சுந்தரி பொய்யைப் பற்றி பின் வருமாறு உபந்நியாசித்தாள்:- 

26. பொய்யைப்பற்றி ஓர் உபந்நியாசம் 

சகல துர்க்குணங்களுக்கும் பொய்யே அஸ்திவாரமாயிருக் கின்றது. எப்படியெனில், ஒரு குற்றத்தைப் பொய் சொல்லி மறைத்து விடலாமென்னும் தைரியத்தாற் செய்கிறபடியால், கொலை, களவு, வஞ்சகம், காமம் முதலிய சகல குற்றங்களுக் கும் பொய்யே பிதுர்ஸ்தானமா யிருக்கின்றது. ஆகையால் ஒருவன் பொய்யை விட்டு விட்டால், அந்தத் துர்க்குணங் களும் நாளுக்கு நாள் குறைந்து விடுமென்பதற்குச் சந்தேக மில்லை. நம்முடைய உண்மையான கருத்தை ஒருவருக் கொருவர் வெளிப்படுத்தி அநுகூலமடையும் பொருட்டே, கடவுள் நமக்கு வாக்கைத் தந்தருளினார். நம்முடைய நன்மைக்காகக் கடவுள் தந்த வாக்கை, நாம் சத் விஷயத்தில் உபயோகிக்காமல், பொய், மோசம் முதலிய துர்விஷயங் களில் உபயோகிப்பது எவ்வளவு பெரிய அக்கிரமமாயிருக் கிறது? மிருகங்களுக்கும் நமக்கும் உள்ள பேதமெல்லாம் வாக்கு ஒன்றினாலே தான். நாம் பொய் சொல்லி நமது வாக்கைக் கெடுத்துக் கொள்ளுவோமானால், நாம் விலங்கு களினுங் கடை கெட்டவர்களாகிறோம். இடிந்த வீட்டுக்கு முட்டுக்கொடுப்பது போல், நாம் ஒரு பொய் சொன்னால், அதை ஸ்தாபிக்கப் பல பொய்களின் சகாயம் வேண்டியிருக்கின்றது. “கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்” என்பது போல் என்றைக்கிருந்தாலும் பொய் வெளியாகாமற் போகிறதில்லை. வழக்கமாய்ப் பொய் சொல்லுகிறவன் ஒரு மெய் சொன்னாலுங் கூட அதை ஒருவரும் நம்பார்கள். அவன் என்ன துன்பம் அடைந்தாலும், அவனுக்காக ஒருவரும் இரங்கார்கள். அவனுக்கு அற்பத் தொகை கூட ஒருவரும் கடன் கொடார் கள். அவனுக்கு யாதொரு ஜீவனம் அகப்படுவதும் மகா கஷ்டம். அவனுடைய மனைவி மக்களே அவனை இகழு வார்கள். பொய்யரைப் பொய்யரும் நம்பார்கள். பொய்யனென்று பெயரெடுத்தவன் என்ன பிரமாணஞ் செய்தாலும் அவனுடைய வார்த்தையை நியாய ஸ்தலத்தார் நிஷித்தஞ் செய்கிறார்கள். உலகத்தில் மனிதர்களுக்கு உண்டாகிற பல துன்பங்களுக்கும் பெரும்பாலும் பொய்யே ஆஸ்பதமா யிருக்கின்றது. தான் செய்த குற்றத்தைப் பொய் சொல்லி மறைக்கிறவன் இரண்டு குற்றஞ் செய் கிறான். எப்படியென்றால். தான் செய்த குற்றம் ஒன்று. அதை மறைக்க யத்தனப்பட்ட பொய்க் குற்றம் ஒன்று. ஆக இரண்டு விதமான குற்றவாளியாகிறான். நாம் வாயாலே பொய் சொல்லாவிட்டாலும், கண்சாடை, கைச்சாடை, தலையசைவு முதலிய சைக்கினைகளால், பொய்யை மெய்யென்று தோன்றும்படி செய்வோமானால், அவைகளும், பொய்தானே. உபயார்த்தமாய்ப் பேசி, உண்மையை மறைப்பதும் பெரும் பொய்யன்றோ? உலக மானது உண்மையினாலே உஜ்ஜீவிக்கின்றது. உண்மையென் பது சுத்தமாயில்லாவிட்டால் தேச காரியங்களும், நியாய பரிபாலனங்களும், குடும்ப காரியங்களும், மற்ற வியாபாரங் களும் எப்படி ஒழுங்காய் நடக்கும்? அந்த விஷயங்களில் இப்போது நடக்கிற அக்கிரமங்களுக்குப் பொய்யே முக்கிய காரணமாயிருப்பதால், பொய்யை மனப்பூர்வமாய் வெறுக்க வேண்டியது நம்முடைய கடமையாயிருக்கிறது” என்றாள். 

இந்த உபந்நியாசத்தைக் கேட்டவுடனே அந்தத் தாதி நாணமடைந்து, மதுரேசனைக் குறித்துத் தப்பு ஸ்தோத் திரஞ் செய்கிற வழக்கத்தைவிட்டு விட்டாள். இதைக் கேள்வியுற்று மதுரேசன் மன மயங்கிக் கொண்டிருக்கையில் அவனுக்கு நண்பனும் அரைப்படிப்பைக்கொண்டு அம்பலத்தி லேறினவனுமான ஒரு மூடக் கவிராயன் அவனை நோக்கிச் சொல்லுகிறான்: “ஸ்தோத்திரத்தினால் வசியமாகாத ஸ்திரீகள் ஒருவருமில்லை. அவர்களுடைய அழகை யார் அதிகமாகப் புகழுகிறார்களோ, அவர்கள் மேலே அவர் களுக்கு அத்தியந்த விசுவாசம். நான் கல்லையுங் கரைக்கும் படியான ஒரு கவி பாடித் தருகிறேன். அதை நீ அவளிடம் அனுப்பினால் உடனே உன் ஸ்வாதீனமாவாள்” என்று சொல்லி, ஒரு கவியும் பாடிக்கொடுத்தான். இலக்கண வழுக்கள் நிறைந்த அந்தக் கவியைப் பிரசுரஞ் செய்ய நமக்குப் பிரியமில்லாமையால், அதன் பொருளை மட்டும் ஒருவாறு சுருக்கிச் சொல்லுவோம். 

27. சுகுணசுந்தரியின் அழகைக் குறித்து ஓர் மூடக்கவிராயன் பாடிய கவியின்பொருள். 

மகிமை தங்கிய புகழ் விளங்கிய சுகுண சுந்தரி காண்க. “சில நாளாய் உன்னுடைய தரிசனம் எனக்குக் கிடைக் காமலிருந்தபோதிலும் உன்னுடைய முகமாகிய சந்திரன் என்னுடைய ஹிருதயமாகிய ஆகாயத்தில் எஞ்ஞான்றும் பிரகாசித்துக்கொண்டிருக்கின்றது. உன்னுடைய அழகை வர்ணிக்க ஆயிரம் நாவுடைய ஆதிசேஷனாலுங் கூடுமா? உன்னுடைய திருமுகத்துக்குத் தோற்றுப்போய்ச் சந்திரன் மெய் வெளுத்து, உள்ளங் கறுத்து நாள்தோறுந் தேய்ந்து போகிறான். அப்படியிருக்கச் சேற்றிலே பிறந்து மதுகரங் களால் சுவைக்கப்பட்டு இரவிலே குவிந்து வாடிப்போகிற தாமரை மலர் உன் முகத்துக்கு எங்ஙனஞ் சமானமாகும்? மேகங்கள் உன்னுடைய கூந்தலுக்குச் சமானமாகாமையால் ஜலப்பிரவாகமாய்க் கண்ணீர் வடித்து அழுதுகொண்டு ஆகாயத்திலே திரிந்துகொண்டிருக்கின்றன நாலு காலோடும் ஒரு வாலோடுங் கூடிய மிருக ஜந்துவாகிய மானையும் துர்நாற்றமுடைய மீனையும் உன் கண்ணுக்கு எப்படி ஒப்புச் சொல்வேன்? நாட்டிலே சஞ்சரித்துக் கொண்டிருந்த அன்ன மும் மயிலுங் குயிலுங் கிளியும் பூவையும், உன்னுடைய நடைக்குஞ் சாயலுக்கும் மொழிக்குந் தோற்றுப்போய்க் காட்டிலே சஞ்சரிக்கின்றன. முத்துக்கள் உன்னுடைய பல்லுக்குப் பயந்து, சிப்பிக்குட் புகுந்து கடலில் ஒளிந்து கொண்டேயிருக்கின்றன. எல்லாருந் துப்பு துப்பு என்று சொல்லுகிற பவளத்தை உன்னுடைய இதழுக்கு நான் எப்படி ஒப்புரைப்பேன்? பிரமா உனக்குச் சகல அவயவங் களையும் படைத்து, இடையைப் படைக்காமல் விட்டு விட்டது மறதியினாலோ அல்லது திருஷ்டி பரிகாரத்துக் காகவோ தெரியவில்லை” என்பதுதான். 

மதுரேசன் அந்தக் கவியை ஒரு சகி வசமாய்ச் சுகுண சுந்தரியிடம் அனுப்பினான். அதைப் பார்த்த உடனே கோபமென்பதையே அறியாத சுகுணசுந்தரிக்குப் பிரமாத மான கோபமுண்டாகி, அந்தக் கவியைக் கிழித்து அதைக் கொணர்ந்தவள் தலை மேலே விட்டெறிந்து ஒரு துண்டுக் காகிதத்தில் “பிரமா எனக்கு இடையைப் படைக்க மறந்து விட்டதுபோல உனக்குப் புத்தியைப் படைக்க மறந்து விட்டான்” என்று எழுதி, அச் சகியின் கையிலே கொடுத் தனுப்பினாள். அந்த லிகிதத்தைக் கண்ணுற்ற பின்பு மதுரேசன் தான் செய்தது பிசகென்று மிகவும் சிந்தாக் கிராந்தனானான். 

28. சுகாதார விதிகள் 

சுகுண சுந்தரிக்குப் பல தாதிகளிருந்தும் அவள் தன்னுடைய வேலைகளைத் தன் கையாலே செய்துகொள் வதைக் குறித்து, அரசன் குரு சிரேஷ்டரிடத்தில் முறை யிட்டான். குரு சிரேஷ்டர் அரசனை நோக்கி “சுகுண சுந்தரி செய்வது மிக நல்ல காரியம். நமக்குத் தேக சுகம் வேண்டி யிருப்பதால் தேகப் பிரயாசைப்பட வேண்டியது முக்கியம்” என்று குரு சிரேஷ்டர் சுகாதார விதிகளைப்பற்றிப் பின்வரு மாறு பிரசங்கித்தார்: 

29. மிதபோஜனமும், சுத்த ஜலமும், சுத்த மான வாயுவும், தேக தேக முயற்சியும், சரீர சுகத்திற்கு இன்றியமையாத முக்கிய சாதனங்கள். 

“இகலோக சம்பந்தமான சகல பாக்கியங்களிலும் சரீர சுகமே பிரதானமா யிருக்கின்றது. ஏனென்றால், “சுவரை வைத்துக் கொண்டல்லவோ சித்திரம் எழுத வேண்டும்?” என்கிற பழமொழிப்படி, சரீர சௌக்யமிருந் தல்லவோ மற்றப் பாக்கியங்களை அனுபவிக்க வேண்டும். சரீர சௌக்கியமில்லாவிட்டால் தனதானிய முதலான சம்பத்துக்களினாலே பிரயோசனமென்ன? ஆனது பற்றியே நோயற்ற வாழ்வுங் குறைவற்ற செல்வமுமா யிருக்கவேண்டு மென்று சிறுவர்களைப் பெரியவர்கள் ஆசீர்வதிக் கிறார்கள். நாம் உண்ணும் உணவும், குடிக்கிற ஜலமும், சுவாசிக்கும் வாயுவும் தேக சுகத்திற்கு முக்கிய சாதனங்களா யிருக்கின்றன. மனிதனுடைய முகங்களையுங் குணங்களையுங் குரல்களையும் கடவுள் வேறுபடுத்தியிருப்பதுபோலவே அவர்களுடைய தேகங்களின் இயல்பையும் வேறுபடுத்தி யிருக்கிறாரென்று அனுபவ சித்தமாய்த் தோன்றுகின்றது. எப்படியென்றால் சிலருக்குப் பித்த தேகமும், சிலருக்கு வாயு தேகமும், சிலருக்கு உஷ்ண தேகமும் இவ்வாறு மாறியிருக் கின்றன. நாம் உண்ணும் பதார்த்தங்களில் சில பித்தாதிக்க மாயும், சில உஷ்ணாதிக்கமாயும், சில வாதாதிக்கமாயுமிருக் கின்றன. இன்னமும் சில பதார்த்தங்கள் பித்தசாந்தி யாயும், சில உஷ்ண சாந்தியாயும், சில வாதசாந்தியாயும் இருக்கின்றன. கடவுளுடைய கிருபையால் நாம் சாப்பிடும் பதார்த்தங்களே ஒன்றுக்கொன்று சத்துரு மித்துருவாயிருக் கிறபடியால் நாம் சமயமறிந்து தக்க உணவுகளை அருந்த வேண்டும். எந்தப் பதார்த்தம் நம்முடைய உடம்புக்கு ஒத்திருக்கிறதென்றும், எது ஒத்துக் கொள்ளவில்லையென்றும், இன்ன பதார்த்தம் சாப்பிட்டதினால் தேகத்தில் இன்ன நன்மை அல்லது கெடுதி உண்டாயிற்றென்றும், நாம் எப்போதுங் கவனிக்க வேண்டும். 

30. மித போஜனத்தின் மஹிமை 

“நாம் அருந்தும் பதார்த்தங்களின் குணாகுணங்களை அறிவதற்கு நம்முடைய சொந்த அநுபோகமே போதுமான தாயிருக்கிறது. நாம் அசெளக்கியமான உண்டிகளை உண்ணும்பொழுது அஜீரணம், மந்தம், தலைவலி முதலிய சிறிய உபாதிகளை உண்டாக்கிக் கடவுள் நம்மை எச்சரிக்கைப் படுத்துகிறார். அந்த எச்சரிக்கையை நாம் கவனித்து அதற்குத் தக்கபடி நடந்துகொள்ள வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிருதமும் விஷமாதலால் நாம் எப்போதும் மிதபோஜனம் செய்யவேண்டும். ஆகாரம் சிறிது குறைந் தாலும் பாதகமில்லை. அதிபோஜனம் அசௌக்கியத்தை யுண்டாக்கும். நம்மைத் தூக்க வேண்டிய வாகனத்தை நாமே தூக்கிச் சுமப்பதுபோல, நம்மைத் தாங்கவேண்டிய ஆகாரத்தை நாம் அதிகமாய்ப் புசித்தால் அந்த ஆகாரமே நமக்குச் சுமையாய் முடிகின்றது. 

ஒரு நாள் இரண்டு பிராமணர்கள் அளவுக்கு மிஞ்சின போஜனம் அருந்தினதால் கீழே குனியக்கூடாமல் அண்ணாந்துகொண்டு மேல் நோக்கின பார்வையாய்த் தெருவில் போகும்போது, அவர்களில் ஒருவனுக்குக் காலில் மிதியடி யிருக்கிறதா இல்லையா வென்கிற சந்தேகமுண்டாகி மற்றொருவனை நோக்கி “தம்பி, சுப்பு! என் காலில் மிதியடி யிருக்கிறதா பார்” என்றானாம். அந்தப் பிராமணனும் குனியக்கூடாமல் அண்ணாந்துகொண்டு போனதால் அண்ணா! ஆகாச மண்டலம் வரையிலும் பார்த்தேன்; மிதியடியைக் காணேன் என்றானாம். இப்படிப்பட்ட பேருண்டிக்காரர்களுக்கு எப்படி அசௌக்கிய மில்லாம லிருக்கும்? நம்முடைய ஆகாரம் சாதாரணமா யிருக்க வேண்டுமே யல்லாது, பல சம்பாரங்களையும் வாசனைப் பண்டங்களையுஞ் சேர்த்துச் சமையல் செய்யக்கூடாது. விலங்கு, பக்ஷிகளில் ஒவ்வொரு இனம் ஒவ்வொரு விதமான இரையைத்தான் புசிக்கின்றது. அப்படியே ஆடு, மாடு முதலியன புல், பூண்டு முதலியவைகளை மட்டும் புசிக் கின்றன. சில மிருகங்களும், பக்ஷிகளும் மாமிசாதிகளை மட்டும் புசிக்கின்றன.சில பக்ஷிகள் தானிய வகைகளை மட்டும் புசிக்கின்றன. மனிதன் உலகத்தில் சாப்பிடாத வஸ்து ஒன்று மில்லை. சகல தானிய வகைகளும், சகல மரக்கறி பதார்த் தங்களும், சகல விதமான மாமிசாதிகளும் சாப்பிடுகிறான். அவைகளின் சௌக்கியா சௌக்கியங்களை நாம் எப்போதுங் கவனித்து அசெளக்கியமான வஸ்துக்களை அருந்தாமல் தள்ளிவிட வேண்டும்.

– தொடரும்…

– சுகுணசுந்தரி சரித்திரம் மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் எழுதிய இரண்டாவது நாவல். 1887ல் இந்நாவலை வெளியிட்டார்.

– சுகுணசுந்தரி (நாவல்), முதற் பதிப்பு: அக்டோபர் 1979, வானவில் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *