கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: June 26, 2024
பார்வையிட்டோர்: 780 
 
 

“கொல்லுங்கடா அவன!, இவன் செஞ்ச காரியத்துக்கு உயிரோடவே இருக்க கூடாது”! தீப்பந்தம் கக்கிய தீப்பிழம்புகளின் பிரகாசம் காட்டிலும் ஊர்மக்களின் முகத்தில் வன்மம் கொழுந்து விட்டு எரிந்தது.

இப்படி ஓர் ஊரையே யமதூதர்களாக மாற்றும் அளவிற்கு என்ன தான் நடந்தது? யாரை கொல்ல துடிக்கிறார்கள்? அந்த முகத்தைப் பார்த்தால் போதும். யாரது? இன்னும் கொஞ்சம் நெருங்கினால் முகம் தெரிந்து விடும்.

“பிந்தாங் எஸ்டேட் வந்திரிச்சி இறங்கிகோ பா…”, லாரி ஹார்ன் சத்தத்தோடு ஓட்டுநர் கூவியது முகிலனை எழுப்பியது.

“தம்பி பிந்தாங் எஸ்டேட் கிட்ட தானே இறக்கி விட சொன்னே?… இடம் வந்துருச்சி பாரு.. இறங்கு!”, லாரி ஓட்டுனரின் அதட்டலுக்கிணங்க முகிலனும் தன் உடமைகளை எடுத்துக் கொண்டு கீழிறங்கினான்.

லாரி வேகமாகக் கிளம்பியதைக் கூட உணராமல் திக்பிரமை பிடித்தவன் போல எஸ்டேட்டின் கல்வெட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான். பிந்தாங் எஸ்டேட் 2km என்று அக்கல்லில் பொறிக்கப்பட்டிருந்தச் சொற்கள் அவன் இன்னும் நடக்க வேண்டும் என்பதைப் புலப்படுத்தியது.

பெருமூச்சு விட்டவன், உடைமைகளை எடுத்து நடக்கலானான். மனதில் அவனுக்கு வந்த கனவு மீண்டும் நினைவிற்கு வந்து கொண்டே இருந்தது.

“மாச கணக்கா எனக்கு ஏன் இந்தக் கனவு வருது? ஒரு ஒரு நாளும் நடக்குற சம்பவம் இன்னும் தெளிவா தெரியுது…இது கனவா? இல்ல ஏதாச்சும் ஞாபகமா? எனக்கு நினைவு தெரிஞ்ச வரைக்கும் பட்டணத்தை விட்டு நம்ம வந்ததே இல்லேயே?”, விடையறியா கேள்விகளால் அவனது மனம் அலைமோதிக் கொண்டிருந்தது.

வேலை கடிதம் வரும் வரை பிந்தாங் எஸ்டேட்டைப் பற்றி அவன் கேள்வி பட்டது கூட இல்லை. அவனின் தந்தை அந்த எஸ்டேட்டில் தான் பிறந்தார் என்பது அவனுக்குப் பின்னரே தெரிய வந்தது.

“ஏன்னு தெரிலடா… உன் அப்பா அவரு பொறந்த கம்பத்தைப் பத்திப் பேசுறது இல்ல. அவரு அப்பாவ மட்டும் விட்டுட்டு வந்துட்டாரு மட்டும்தா எனக்கு தெரியும். என்ன ஏதுனு ஒண்ணுமே தெரில இப்போ. உன் தாத்தா இன்னும் இருக்காரனு வேற தெரில. அந்த எஸ்டேட்கே உனக்கு போற வாய்ப்பு கிடைச்சிருக்கு. அவரே தேடி பாரு.” தாய் சொன்னது அவன் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது. கற்றுக் கொடுப்பதற்காக மட்டும் முகிலன் இந்த இடத்திற்கு வரவில்லை. தன் பூர்விகத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள தான் வந்திருக்கிறான் என புலப்பட்டது.

“ஐயா நீங்கதான் கார்முகிலன் சாருங்களா?” பொடியன் ஒருவன் முகிலனை நெருங்கினான்.

நிகழ்காலத்திற்கு இழுக்கப்பட்ட முகிலனும் சற்றே நிமிர்ந்து பாத்தான். 15 வயது தான் இருக்கும். நல்ல மாநிறம்.

பரட்டை தலை அவன், பள்ளி பக்கமே எட்டி பாக்காதவன் என கட்டியம் கூறியது.

“ஆமா தம்பி நான்தான்..” முகிலன் கூறி முடிப்பதற்குள் அப்பையன் அவனிடம் இருந்து பைகளை வாங்கி கொண்டான்.

“என் பேரு சுரேஷ் சார். பசங்கலாம் என்னை பரட்டைனு கூப்பிடுவாங்க. நீங்களும் அப்படியே கூப்பிடலாம். உங்களுக்கு ஒத்தாசை பண்ணனும்னு எங்க எஸ்டேட் மேனேஜர் அனுப்பி வெச்சாரு. வாங்க அவர உங்களுக்குக் காட்டுறேன்” பட படவென பேசினான்.

“பரவால தம்பி உன்னை சுரேஷ்னே கூப்பிடுறேன். சரி தானே?” முகிலன் கேட்ட கேள்விக்கு சுரேஷ் அரை சிரிப்போடு தலையாட்டினான். பரட்டை என்ற

அடைமொழிக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தவனிடம் அக்கட்டுகளை அவிழ்க்க வழி கொடுத்தப் பெருமிதம் அச்சிரிப்பில் தெரிந்தது.

பேசி கொண்டே இருவரும் எஸ்டேட்டிற்குள் நுழைந்தனர். அங்கே முகிலனின் வருகைக்காக எஸ்டேட் மேனேஜர் காத்துக் கொண்டிருந்தார்.

“வாங்க மிஸ்டர் முகிலன்! நான் நெல்லையப்பன் இந்தப் பிந்தாங் எஸ்டேட்டோட மேனேஜர். உங்களுக்காகதான் காத்துட்டு இருந்தேன். பயணம்லா எப்படி இருந்துச்சி? ரொம்ப தூரம் நடந்து வந்துருப்பீங்க, களைப்பா இருக்கும் வாங்க தேஹ் தாரிக் குடிச்சிட்டு பேசுவோம்”. மேனேஜரின் உபச்சாரம் தேனாய் இனித்தது.

உபச்சாரத்திற்கு ஏற்றவாறு நெல்லையப்பனுடன் உரையாடி கொண்டே தேநீரோடு சேர்த்து உணவருந்தி கொண்டிருந்தான். பட்டணத்தில் இருந்த முகிலனுக்கு எஸ்டேட் ஸ்கூல் பற்றித் தெரியாததால் மேனேஜர் அதன் விவரங்களை விளக்கிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து அவர்களின் உரையாடலைக் கலைக்கும் வகையாக வேலையாள் ஒருவன் நெல்லையப்பன் காதில் எதையோ முணுமுணுத்தான். என்ன சொன்னான் என்றுதான் தெரியவில்லை. ஆனால் மேனேஜரின் முகம் கருத்ததை மட்டும் முகிலனால் உணர முடிந்தது.

“தம்பி நீங்க சாப்டுட்டு இருங்க. ஒரு சின்ன வேலை. போயிட்டு வந்துர்றேன்..” அரை குறையாகச் சொல்லிவிட்டு நெல்லையப்பன் அங்கிருந்து நகன்றார்.

உணவருந்திவிட்டு கை அலம்ப முகிலன் சென்றபோது அவன் கண்ணில் சுரேஷ் தென்பட்டான்.

“சுரேஷ் இங்கே வா. என்ன விஷயம்னு தெரில. ஆனா மேனேஜர் என்கிட்ட எதையோ மறைக்கிற மாறி இருக்கு. எஸ்டேட்க்குள்ள வரும் போதே கூட பாத்தேன். ஆளுங்க நடமாட்டம் ரொம்ப குறைவா இருக்கு. என்னதா ஆச்சு?” முகிலனின் கேள்விக்குச் சுரேஷ் திகைப்புடன் நின்று கொண்டிருந்தான்.

சுற்றும் முற்றும் பார்த்த பிறகு சுரேஷ் மெதுவாக முகிலனை நெருங்கினான்.

“நீங்க நினைக்கிறது சரிதா சார். இந்த எஸ்டேட்ல ஒரு பிரச்சனை இருக்கு. 12 வருஷத்துக்கு முன்னாடி இந்த ஊருல நிறைய பசங்க காணாம போனாங்க. எஸ்டேட்டே அந்த நேரம் கதி கலங்கி போச்சு.” சுரேஷ் பெருமூச்சு விட்டான்.

“அப்புறம் என்னதா ஆனுச்சு? யாரு செஞ்சா இதெல்லாம்? அவன புடிச்சாங்களா இல்லையா?” முகிலன் ஆர்வத்துடன் கேட்டான்.

“புடிச்சாங்க சார். இங்க சாமியாரு ஒருத்தர் இருந்தாரு.. அவர எல்லாரும் தெய்வமாதா பாத்துட்டு இருந்தாங்க. ஆனா அவர் மூட நம்பிக்கைல சாவே இல்லாம இருக்கணும்னு குழந்தைங்கள பலி குடுத்தாருனு என் பாட்டி சொல்லும். அவரோடே குடும்பம் கூட எஸ்டேட்டை விட்டு அப்போவே போய்ட்டாங்க. என்னை கடத்த பாத்த நேரத்துலதான் எஸ்டேட்ல இருந்தவங்க கிட்ட மாட்டிகிட்டாரு.”

“அப்போ உன்னாலதான் அந்தக் கடத்தல்காரன் மாட்டிகிட்டானா?” முகிலன் லேசாக சிரித்தான்.

“அப்படியும் சொல்லலாம் சார். எனக்கு என்ன தெரியும்? ஆனா அந்தச் சாமியார கொன்ன விதம்தான் இப்போ வரைக்கும் எனக்கு சிலிர்த்துப் போன கதை. அந்தச் சாமியார அடிச்சுப் போட்டு கம்பத்துல கட்டி போட்டுட்டாங்க.” சொல்லும் போதே சுரேஷின் முடி கூசச்செறிந்தது புலப்பட்டது.

முகிலனின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. பழைய நினைவு ஏதோ மூளையை ஊடுருவது போல உணர்ந்தான். குரலில் நடுக்கம் காட்டிக் கொள்ளாமல் “என்ன தீப்பந்தம் கொளுத்தி அந்த ஆளு மேல நெருப்பு வெச்சிட்டிங்களா?” சிரித்தவாறு கேட்பது போல கேட்டான்.

சுரேஷின் கண்கள் அகன்றன. “எப்படி சார் தெரியும்?” என்று அவன் கேட்கும் போது முகிலனின் மனம் மீண்டும் குழப்பத்தினால் அலைமோதியது.

அந்தக் கனவிற்கும் இந்த எஸ்டேட்டில் நடந்த சம்பவத்திற்கும் தொடர்பு உண்டா? முகிலனுக்கும் அந்தச் சம்பவத்திற்கும் என்ன தொடர்பு? ஏன் அவனுக்கு கனவு வந்தது?

“சார் பாக்க ஒரு மாறிய இருக்கீங்க? ஏதாச்சும் பிரச்சனையா?” சுரேஷின் இந்தக் கேள்வி முகிலனை மீண்டும் சுயநினைவுக்குக் கொண்டு வந்தது. தன்னை சுதாகரித்துக் கொண்டு சுரேஷை மீண்டும் நோக்கினான் முகிலன்.

“சரி 12 வருஷத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம் தானே? இன்னிக்கி என்ன பிரச்சனை?” என கேட்டான். “அந்தச் சாமியாரு இன்னும் சாகலனு எஸ்டேட்ல நிறைய பேரு நம்புறாங்க சார். ஆவியா இன்னும் இங்க இருக்குறவங்கள பழி வாங்குறாருனு ஒரு செய்தி ஓடுது. அப்போ அப்போ குழந்தைங்க காணாம போயிடுறாங்க. இதனால் பல பேரு இந்த எஸ்டேட் விட்டே போய்ட்டாங்க சார். மொதல்ல ஐயா கிளம்புனாருல… அதுக்கும் இதுதான் காரணம். இன்னிக்கி ஒரு பிள்ளை காணாம போச்சு..” சுரேஷ் சொன்னது நடு மண்டையில் ஆணி இறக்கியது போல் இருந்தது.

ஒரு சின்ன எஸ்டேட்ல இவ்வளவு பிரச்சனையா? தனக்கு ஏன் அப்படி ஒரு கனவு வர வேண்டும்? எஸ்டேட்டின் தலையெழுத்தை மாற்றுவதற்காகத் தனக்குக் கடவுள் அறிகுறி கொடுக்கிறாரா?.. அதுவும் இல்லாம நம்ம தாத்தா இங்கே இருக்காரா இல்லையானு தெரில வேற”.. இப்படி பலவாறான எண்ணங்கள் முகிலனின் மனதில்.

“இதெல்லாம் உங்க கிட்ட சொன்னேன்னு ஐயா கிட்ட சொல்லிறாதீங்க சார். உங்களுக்கு முதல விஷயம் தெரிய வேணாம்னுதான் எங்க கிட்ட சொல்லி வெச்சாரு. ஆனா நீங்க என்னை அவ்ளோ மரியாதையோட நடத்துனீங்க அதனால மறைக்க முடியல. வேற ஏதாச்சும் உதவி வேணும்னா சொல்லுங்க சார் அப்புறம் செய்றேன்.” இவ்வாறு பேசி விட்டு சுரேஷ் அங்கிருந்து நகன்றன்.

அன்றிரவு முகிலன் தூங்க முடியாமல் திணறினான். “படங்களில் அதிகம் பாத்திருக்கேன். ஆனால் நான் இப்படி ஒரு சூழ்நிலைல இருப்பேன்னு நினைக்கல… கண்டிப்பா இந்த எஸ்டேட்ட காப்பாத்தக் கடவுள் குடுக்குற அறிகுறிதா இது. இந்த இடத்தோட பிரச்சனைய நீக்கதான் நா இந்த எஸ்டேட்க்கு வரணும்னு விதி போல.. அப்படியே நம்ம தாத்தாவ பற்றியும் விசாரிச்சி பார்க்கணும்.” அதற்குள் நித்திரை தேவி அவனை ஆட்கொண்டாள்.

புது பள்ளிக்கூடத்திற்குச் செல்ல போகும் ஆர்வத்தில் பொழுது விடியாத முன்னே எழுந்து குளித்துவிட்டுக் கருப்பு பேண்ட், நீல சட்டை, அதற்கு மேட்சிங்காகக் கருப்பு ‘டை’ மாட்டிக்கொண்டான் முகிலன். தலைமுடியை வாக்கெடுத்துச் சீவியதோடு பையை எடுத்து கொண்டு பள்ளிக்கூடத்திற்கு நடையைக் கட்டினான். மதியம் 1 மணி பள்ளிக்கூடம் மணி அடிக்க மாணவர்கள் திறந்து விட்ட ஆட்டு பண்ணைப்போல் வீட்டிற்கு ஓடினர். முதல்நாள் புது இடத்தில் பாடம் படித்து கொடுத்த இன்பம் முகிலன் முகத்தில் பிரகாசமாய் ஒலித்தது.

“என்ன சார் பேண்ட் சட்டைல பார்க்க அம்சமா இருக்கீங்க.. அப்புறம், முதல் நாள் எங்க ஸ்கூல் எப்படி இருந்துச்சி?” பக்கத்து வகுப்பிலிருந்து வெளியேறி நடந்து வந்து கொண்டிருந்த முகிலனைப் பார்த்து வினவினான் சுரேஷ்.

பெருமிதம் முகத்தைக் காட்டியவாறு “ஹ்ம்ம்.. பசங்க கொஞ்சம் சேட்டை பண்ணாலும் நல்ல பிள்ளைங்களா என் பேச்ச கேக்குறாங்கதான். சரி அது விடு இன்னிக்கி எப்படியாச்சோ பிள்ளைய கடத்துறவன கையும் களவுமா புடிக்கலானு இருக்கேன். அதுக்கு உன் ஹெல்ப் வேணும். ஒரு 12 மணி போல கிளம்பி என் வீட்டுக்கு வந்துரு”

முகிலன் கூறியதைக் கேட்டவுடன் அதிர்ச்சி குளத்தில் விழுந்தான் சுரேஷ். கண்கள் பிதுங்கி வெளியே வந்து விழுவது போல் ஒரு பார்வை. “என்ன சார் சொல்றிங்க நாம புடிக்க போறோமா?…சரி சார் வந்துறேன் இன்னிக்கி இதுக்கு ஒரு முடிவு கட்டுவோம்” அவனுள் ஒரு புத்துணர்ச்சி உதித்தது.

இருளோடு அந்த எஸ்டேட் மயான அமைதியில் உறங்கிக்கொண்டிருந்தது. முகிலனும் சுரேஷும் ஒரு கையில் கம்போடும் மறுகையில் டார்ச் லைட்டுடனும் பதுங்கி பதுங்கி எஸ்டேட்டைச் சுற்றி வலம் வந்துகொண்டிருந்தனர். கடத்தல் போன்று எந்த அறிகுறிகளும் அவர்களுக்கு தென்படவில்லை.

“ஐயோ பேய் பேய்…!” சுரேஷ் எதையோ பார்த்து அலறிக்கொண்டு முகிலன் பின்னாடி ஒளிந்து கொண்டான். கையில் இருந்த டார்ச் லைட்டைக் கொண்டு உருவம் தெரிகின்ற திசையை நோக்கிப் பார்த்த பொழுது நெல்லையப்பன் கண்களுக்குத் தெரிந்தார்.

அவரை கூப்பிடலாம் என்று அருகில் சென்றபொழுது மேனேஜரின் நடத்தையில் ஏதோ ஒரு மாற்றம் தெரிவது போல் உணர்ந்தனர். ஒரு பெரிய புதருக்கருகே ஒளிந்து கொண்டு இருவரும் மேனேஜரைக் கவனித்தனர். சுற்றி முற்றி மேனேஜரின் கண்கள் அலைமோதின. ஏதோ ஒரு பயத்தில் இருப்பதை மட்டும் அவரின் முகம் காட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தது. நெற்றியிலிருந்து வேர்வை துளிகள் வழிந்து கொட்டுகின்ற போதிலும் ஒரு பெரிய மூட்டையைத் தூக்கி கொண்டு அவரின் வீட்டை நோக்குகிறார். இவருக்கு தெரியாமல் மெதுவாக சுரேஷ் முகிலன் கால்கள் பின்தொடர்ந்தன.

“எங்கடா இருக்கீங்க இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த பையன நாம அனுப்பி வெக்கணும்…சொன்ன நேரத்துக்குள்ள அனுப்பி வெக்காம இருந்தா வர ஐம்பதாயிரமோ கிடைக்காதுடா” பதற்றத்தில் மேனேஜர் போனில் பேசுவதை அவர் வீட்டு பின்னாடி ஜன்னலிலிருந்து ஒட்டுக் கேட்ட இருவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். சற்றும் தாமதிக்காமல் பூனை போல் பதுங்கி சென்று மேனேஜர் இருக்கும் அறையின் கதவை சாற்றிப் பூட்டினான் சுரேஷ்.

“அப்போ நீதா இவளோ நாளா கடத்திகிட்டு இருக்கியா?… இரு இப்போவே எல்லாரையும் கூப்பிடுறேன்” சுரேஷின் முகத்தில் கோவ அனல் பறக்க எஸ்டேட் மக்களைக் கூப்பிட பறந்தான். காவல் துறைக்கு அழைத்து வரவழைத்தான் முகிலன்.

“யோவ் நெல்லையப்பா வெளிய வாயா!! இன்னிக்கி உன்னை கொல்லாம விட போறதுல்ல…எப்படிலா நடிச்சி ஏமாத்திகிட்டு இருந்துருக்கே…உனக்கு எல்லா நல்ல சாவே வராதுடா” மக்களின் சீற்றம் மேனேஜரின் வீட்டின் முன் பொங்கி எழுந்து கொண்டிருந்தது. வசமாக மாட்டிக்கொண்டதை அறிந்து தப்பிக்க வழியில்லாமல் அறையினுள் திக்கு முக்காடி கொண்டிருந்தார் நெல்லையப்பன்.

காவல் துறை அதிகாரி வந்து விசாரிக்கையில் மூட்டையிலிருந்து கடத்திய பையனும் இதுவரை கடத்திய பசங்களும் மீட்கப்பட்டனர். பணத்திற்காகப் பிள்ளைகளைக் கடத்தியதாக நெல்லையப்பன் ஒப்புக் கொண்டான். கையில் விலங்கு மாட்டப்பட்ட மேனேஜரின் முகத்தில் கோவ தாண்டவத்தில் ஆடிக்கொண்டிருந்த மக்களின் செருப்புகள், துடைப்பங்கள் எல்லாம் எறியப்பட்டன.

“நீங்க வாத்தியாரு மட்டும் இல்ல, எங்களை காப்பாற்ற வந்த தெய்வம் யா நீங்க…உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுறது..நீங்க மட்டும் இல்லைனா நாங்க இன்னும் என்னன்ன பாடு பட்டுருப்போமோ…அந்தச் சாமியாரு பேர சொல்லி இந்த ஆளு இத்தனை காலம் எங்கள பயமுறுத்தி வெச்சிருக்கு. இப்போது புரியுது பேயும் இல்ல ஒரு மண்ணும் இல்லனு. இதுகப்புறம் நாம நிம்மதியா வாழலாம்” மக்களின் ஆனந்த கண்ணீரால் முகிலன் வாழ்த்தப்பட்டான். துணையாக இருந்த சுரேஷைக் கட்டி அணைத்தான். எஸ்டேட்டைக் காப்பாற்றிய மனமகிழ்ச்சியோடு வீட்டிற்குச் சென்று கட்டிலில் அசந்தான்.

பல மாதம் அவனை பின்தொடர்ந்த அதே கனவு மீண்டும். யார் அந்த சாமியார்? முகிலன் கனவில் அம்முகத்தைப் பார்க்க அல்லாடினான். “இதோ நெருங்கிட்டேன்.. இன்னும் கொஞ்சம்தான்.” மக்களை தள்ளி கொண்டு முன்னே சென்றான். அங்கே அவன் கண்ட காட்சி…

அடுத்த நாள் வழக்கம் போல் பள்ளி முடித்து விட்டு சுரேஷின் வருகைக்காக முகிலன் காத்துக் கொண்டிருந்தான். ஆனால் அன்று சுரேஷின் நடமாட்டமே காணவில்லை. பள்ளிக்கு வராமல் இருந்திருப்பான் என வீட்டிற்கு நடையைக் கட்டினான் முகிலன். அன்றிரவு அவன் வீட்டு கதவை யாரோ தட தட வென தட்டும் ஓசை கேட்டு மெல்ல கதவை திறந்தான். ஒரு பெண்மணி நின்று கொண்டிருந்தார். முகத்தில் வியர்வை அரும்புகள் துளிர்க்க அவரின் கண்களில் பயம் தாண்டவமாட நின்று கொண்டிருந்தார்.

“ஐயா நா சரளா. பரட்டையோட அம்மா..”. “சுரேஷ் அம்மாவா சொல்லுங்க?” என வினவினான் முகிலன்.“ஐயா நீங்க சுரேஷ பாத்திங்களா? நேத்துலேருந்து காணோம் ஐயா. எப்போமே எங்கே போனாலும் புள்ள கடைசில வீட்டுக்கு வந்துரும் யா.. ஆனா இன்னும் வரல. அத நினைக்கும் போது பதற்றமா இருக்குது.” பதற்றத்தில் வார்த்தைகள் வேகமாகக் கொட்டின.

“அம்மா நானே இன்னிக்கி சுரேஷ பாக்கல. அவன் நேத்து நடந்த விஷயத்துல டயர்ட் ஆகி தூங்கிட்டு இருப்பானு நெனச்சேன். இன்னிக்கி ராத்திரி வரலனா சொல்லுங்க. நாளைக்கி போலீஸ் கிட்ட போய் ஒரு கம்ப்லைண்ட் குடுத்துறலாம்.” முகிலன் வழங்கிய யோசனை சரளாவிற்குச் சரியென பட்டது.

“சரி தம்பி. அப்படி அவன் இங்க வந்தா மட்டும் வீட்டுக்கு வர சொல்லுங்க. அது போதும்.” சரளா அங்கிருந்து கிளம்பினார். முகிலன் மெல்ல கதவை சாத்தினான்.

தனது அறைக்கு சென்றவன் மெல்ல பெருமூச்சு விட்டான். பின்னே நோக்கியவன் சுரேஷ் அங்கே மயக்க நிலையில் கட்டுண்டு கிடப்பதைப் பார்த்து மெல்ல சிரித்தான்.

“குழந்தையா இருக்கும் போது என்கிட்ட தப்பிச்சிட்ட…. இந்தக் கணக்கையும் முடிக்கிறேன்.” என கண்ணாடியை நோக்கினான். அங்கே முகிலனின் முகத்திற்குப் பதில் சாமியாரின் முகம் பிரதிபலித்தது. நடந்தது என்ன என புலப்படுத்தியது.

“இருள் என்னிக்கும் அழியாது. வெளிச்சம் காணாம போன நேரத்தில் இருள் மட்டுமே வாழும். அதுவே வெளிச்சம் வந்த போதிலும் நிழல் ரூபத்தில் இருள் இன்னும் வாழும். என் வம்சமே பேரன் ரூபத்தில் இங்கே வந்து எனக்கு மறுவாழ்வு அளித்தான். இனி அவன் சித்தம் கனவில் மட்டுமே வாழும். என் முகத்தை ஆயுள் முடியும் வரை கனவில் தேடி கொண்டே இருப்பான். அவன் உடலை ஆக்கிரமித்து இங்கே என் பகையை முடிப்பேன். அதில் உன்னை தான் முதலில் முடிக்கனும்.” மூர்க்கத்தனமாகச் சிரித்தார் கொலைகார சாமியார்.

கூரிய வேல்கம்பை எடுத்து மயங்கி கிடந்த சுரேஷை நோக்கி நடந்தார் அச்சாமியார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *